பெங்களூருவில் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களும் ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கையை கையில் எடுத்திருக்கும் நிலையில் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்வதற்கு இது சரியான தருணமா என நெட்டிசன்கள் விவாதம் நடத்தி வருகின்றனர்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வருகை காரணமாக பல்வேறு வேலைகளும் தானியங்கியாக மாற்றப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் பெங்களூருவில் பல்வேறு டெக் நிறுவனங்களும் ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கையை கையில் எடுத்திருக்கின்றன. சர்வதேச அளவில் செயல்படக்கூடிய பல்வேறு பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களும் கூட பெருமளவில் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன.

இத்தகைய சூழலில் பெங்களூரு ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதற்கு இது சரியான தருணமா என்ற வாதம் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது. பெங்களூருவை பொருத்தவரை ஐடி துறை தான் அங்கே ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. நாள்தோறும் ஐடி வேலைக்காக ஆயிரக்கணக்கானவர்கள் பெங்களூருக்கு வருகை தந்த வண்ணம் இருக்கின்றனர். ஏனெனில் பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்களின் அலுவலகங்கள் அனைத்தும் பெங்களூருவில் தான் செயல்படுகின்றன.
தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அமெரிக்க பொருளாதார மந்த நிலை உள்ளிட்டவை காரணமாக பல்வேறு ஐடி நிறுவனங்களும் தங்களுடைய ஊழியர்களை பணிநீக்க ம் செய்து வருகின்றன. அதே வேளையில் புதிதாக ஊழியர்களை பணிக்கு எடுப்பதை குறைத்துவிட்டன.
இதன் காரணமாக பெங்களூருவில் வாடகைக்கு வீடு தேடுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக சொல்லப்படுகிறது. எனவே பெங்களூருவில் வாடகை வருமானத்திற்காக ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய எண்ணுபவர்கள் ஆறு மாத காலம் காத்திருந்து அதன் பின்னர் முடிவெடுக்கலாம் என ரெடிட் தளத்தில் ஒரு பயனர் பதிவு வெளியிட்டுள்ளார். அவருடைய இந்த பதிவு பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.
ஒரு பயனர் பெங்களூருவில் தற்போது ரியல் எஸ்டேட் விலைகள் உண்மையான மதிப்பை விட பல மடங்கு செயற்கையாக உயர்த்தப்பட்டுள்ளன எனக் கூறியுள்ளார். ரியல் எஸ்டேட் மதிப்புகள் திருத்தத்திற்கு உட்பட வேண்டிய காலம் வந்துவிட்டது என்றும் ஐடி நிறுவனங்கள் மேற்கொள்ளக்கூடிய பணிநீக்க நடவடிக்கைகளால் வாடகை தேவை குறைந்து வீடுகளின் மதிப்பு திருத்தத்திற்கு உள்ளாவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் ஏற்கனவே ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மலிவு விலை வீடுகளை கட்டி விற்பனை செய்வதை குறைத்துவிட்டன. நோ புரோக்கர் வெளியிடும் விவரங்களின் படி 40 முதல் 80 லட்சம் வரை மதிப்பு கொண்ட வீடுகளை கட்டி விற்பனை செய்வது 29 சதவீதம் வரை சரிவடைந்து விட்டது.
எனவே பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பை வாங்க வேண்டும் என எண்ணுபவர்கள் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலவிட வேண்டி இருக்கும். இந்த சூழலில் தான் ஆறு மாத காலம் பொறுத்திருந்து முதலீடு செய்யுங்கள் என்று அறிவுரை வந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications