இந்திய ஐடி சேவை துறை செலவுகளைக் கட்டுப்படுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது, ஒருபக்கம் புதிய வர்த்தகம் கிடைப்பதில் சவால், ஊழியர்களின் சம்பளத்தின் வாயிலாக அதிகப்படியான நிதி சுமை என ஐடி நிறுவனங்கள் இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டு உள்ளது. இந்தச் சூழ்நிலை கடந்த வருடம் துவங்கியது, அப்போது அடுத்த 6 மாதத்தில் எல்லாம் சரியாகிவிடும் எனப் பேசப்பட்ட நிலையில் 1.5 வருடமாக இதே சூழ்நிலை நிலவுகிறது.
இதனால் ஐடி சேவை நிறுவனங்கள் கடுமையான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளனர். இதில் முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுவது பிரஷ்ஷர்களைப் பணிக்குக் கல்லூரியில் இருந்து சேர்ப்பது, மிகவும் குறைவான ஊதிய உயர்வு, பென்ச்-ல் இருக்கும் ஊழியர்களை முழுமையாகப் பயன்படுத்துவது, ஊழியர்களின் செயல்திறனை மேம்படுத்தி வெளியில் இருந்து ஊழியர்களைச் சேர்ப்பதைக் குறைப்பது ஆகியவை அடங்கும்.

பொதுவாக ஐடி ஊழியர்கள் சிறப்பாகப் பணியாற்றும் ஊழியர்களுக்கு 20 சதவீதம் வரையில் சம்பள உயர்வை அளிக்கும், இதுவே பதவி உயர்வு கிடைத்தால் 50 சதவீதம் வரையில் சம்பள உயர்வு கிடைக்கும். ஆனால் இந்த வருடம் பதவி உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது, 10 சதவீதத்திற்கும் குறைவான சம்பள உயர்வு கொடுக்கப்படுகிறது.
இதேபோல் முன்பெல்லாம் ஒரு ஐடி ஊழியர் ஒரு நிறுவனத்தில் இருந்து மாற்றொரு நிறுவனத்திற்கு மாறினால், 30 முதல் 45 சதவீதம் வரையில் சம்பள உயர்வு அளிக்கப்படும். கொரோனா தொற்றுக் காலத்தில் 120 சதவீதம் வரையில் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போது 18 முதல் 22 சதவீத வரையில் மட்டுமே சம்பள உயர்வு அளிக்கப்படுகிறது.
மேலே குறிப்பிட்ட அனைத்து சம்பவங்களும் சர்வதேச நிதிநெருக்கடி காலமான 2007 - 2009 வரையிலான காலத்தில் இந்திய ஐடி நிறுவனங்கள் எதிர்கொண்டது. தற்போது மீண்டும் இதே நிலை உருவாக்கியுள்ளது ஐடி துறை முதலீட்டாளர்கள், ஐடி துறை ஊழியர்கள் மத்தியில் அதிகப்படியான அச்சத்தையும் பதற்றத்தையும் அளித்துள்ளது.
இதேவேளையில் இந்திய ஐடி சேவை துறையில் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும் சேவையில் ஆட்டோமேஷன் மற்றும் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்து அதிகரித்துள்ளதால் ஊழியர்களின் தேவையும் பல இடத்தில் குறைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மேலும் கடந்த 3 வருடத்தில் ஐடி சேவைத் துறையின் பெரு நிறுவனங்களின் ஊழியர்களின் சம்பள செலவு 64 சதவீதம் அதிகரித்துள்ளது, ஆனால் வருமானத்தின் அளவு 57 சதவீதமாக மட்டுமே உயர்ந்துள்ளது. இதனால் பல தரப்பினர் இந்திய ஐடி சேவைத் துறையில் அச்சம் இருப்பதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications