2020 யாராலும் மறக்க முடியாத ஆண்டாக மாறியதற்குக் கொரோனா வைரஸ் தொற்று மட்டும் காரணமில்லை, இக்காலகட்டத்தில் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் கட்டுப்பாடுகளும், அதனால் ஏற்பட்ட வர்த்தகப் பாதிப்பு, ஊழியர்கள் பணிநீக்கம், வரலாறு காணாத பங்குச்சந்தை சரிவு, வருமானம் இல்லாமல் பல கோடி குடும்பங்கள் தவித்த நிலை, தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை ஆகியவற்றின் மூலம் அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்க்கையும் தலைகீழாகப் புரட்டிப்போட்டது இந்த 2020.
பொருளாதார நெருக்கடி
இதனால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பு மார்ச் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையில் தொடர்ந்த காரணத்தால் நாட்டின் பொருளாதாரம் 2 காலாண்டுகளாக மோசமான நிலையை அடைந்தது. வரலாற்றிலேயே இந்திய பொருளாதாரம் முதல் முறையாக ரெசிஷன் எனப்படும் பொருளாதார மந்த நிலைக்குத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ICRA அமைப்பின் தலைமை பொருளாதார வல்லுனர் இந்தியாவின் பொருளாதார நெருக்கடி மார்ச் காலாண்டின் இறுதிக்குள் முழுமையாகக் குறைந்து நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பிவிடும் எனக் கணித்துள்ளார்.
பங்குச்சந்தை உச்சம்
இதற்கு ஏற்றார் போல் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு வரலாற்றிலேயே முதல் முறையாக 50,000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்தது. ஆனால் அதன் பின் முதலீட்டாளர்களின் அதீத பங்கு விற்பனையின் காரணமாகச் சென்செக்ஸ் தனது உச்ச அளவான 50000 புள்ளிகளில் இருந்து சரிந்தது.
இறக்குமதி அளவுகள்
மார்ச் காலாண்டில் பெரும்பாலான பொருளாதார வளர்ச்சி காரணிகள் கடந்த ஆண்டை விடவும் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் வெளிநாட்டில் இருந்து செய்யப்படும் இறக்குமதி அளவு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்குவகிக்கும் காரணத்தால் இப்பிரிவை கூர்ந்து கவனிக்கப்பட்டு வருவதாக ICRA அமைப்பு தெரிவித்துள்ளது.
2020 பொருளாதார வளர்ச்சி
ஏப்ரல் ஜூன் 2020 காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் -23.9 சதவீதமாக இருந்த நிலையில், ஜூலை செப்டம்பர் காலாண்டில் -7.7 சதவீதமாக உயர்ந்தது. இந்நிலையில் நாட்டின் வர்த்தகம் மற்றும் உற்பத்தி சந்தை வளர்ச்சிப் பாதையில் இருக்கும் போது டிசம்பர் மற்றும் மார்ச் காலாண்டுக்குள் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்குக் கண்டிப்பாகத் திரும்பும் எனக் கணித்துள்ளனர்.
ஜிஎஸ்டி வரி வசூல்
இதேவேளையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அடைகிறது என்பதற்கு ஜிஎஸ்டி வரி வசூல் அளவில் ஏற்பட்டு உள்ள தொடர் வளர்ச்சி முக்கியச் சான்றாக உள்ளது. ஏப்ரல் மாதத்தில் வெறும் 32,294 கோடி ரூபாயாக இருந்த வரி வசூல், டிசம்பர் மாதம் 115,174 கோடி ரூபாய் என்ற உச்ச நிலையை அடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications