டெல்லி: இந்தியா 50 ட்ரில்லியன் பொருளாதாரம் என்ற நிலையை எட்ட வேண்டும் என்றால் ஐஏஎஸ் அதிகாரிகளாக பிசினஸ் பள்ளிகளில் பயில்பவர்களை நியமிக்க வேண்டும் என இன்போசிஸ் நிறுவனர்களுள் ஒருவரான நாராயணமூர்த்தி யோசனை தெரிவித்துள்ளார்.
சிஎன்பிசி டிவி 18 சார்பாக நடத்தப்பட்ட குளோபல் லீடர்ஷிப் மாநாட்டில் இன்போசிஸ் நாராயணமூர்த்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது இந்தியா 50 ட்ரில்லியன் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கி பயணம் செய்து வருகிறது என்பதை குறிப்பிட்ட அவர், இதற்கு இந்தியா என்னென்ன செய்ய வேண்டும் என தன்னுடைய யோசனைகளை பகிர்ந்து கொண்டார்.

அதில் இந்தியா அட்மினிஸ்ட்ரேடிவ் என்ற மனநிலையில் இருந்து மேனேஜ்மெண்ட் என்ற மனநிலைக்கு மாற வேண்டும் என்றார். அதாவது நமது அரசாங்க செயல்முறைகளை நிர்வாகம் என்ற முறையில் இருந்து மாற்றி மேலாண்மை என்ற முறைக்கு கொண்டு வர வேண்டும் என்றார்.
மேலும் நிர்வாகம் என்பது ஒரு வேலை அவ்வளவு தான், ஆனால் மேலாண்மை என்பது தொலைநோக்குப் பார்வை மற்றும் உயர்ந்த எண்ணங்களை கொண்டது என கூறியுள்ளார். இது சாத்தியமில்லாத சாத்தியமானதை அடைவது பற்றியது என அவர் தெரிவித்தார். தற்போது இந்தியாவில் யுபிஎஸ்சி தேர்வுகள் மூலம் சிவில் சர்வீஸ் பணிகளுக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அரசு நிர்வாகத்திற்கான பயிற்சி வழங்கப்படுகிறது, ஆனால் மேலாண்மை மனநிலைக்கு இதனை மாற்ற வேண்டும் எனில் நமது அரசு அலுவலர்களை தேர்வு செய்யும் நடைமுறையிலையும் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என கூறினார்.
பிஸினஸ் பள்ளிகள் எனப்படும் தொழில் கல்வி நிறுவனங்களில் கல்வி பயின்றவர்களை சிவில் சர்வீஸ் பணிகளுக்கு தேர்வு செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டார். இதன் மூலம் நமது நிர்வாக முறை மாறி நாம் பொருளாதார வளர்ச்சியை நோக்கி வேகமாக அழைத்து செல்லும் என தெரிவித்துள்ளார்.
மேலும் 25 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நிகழ்ச்சியில் வொர்க் லைஃப் பேலன்ஸ் குறித்து தன்னிடம் கேட்டபோது இந்தியா ஒரு ஏழையான நாடு பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டிய நாடு , எனவே முதலில் நமக்கு லைஃப் வேண்டும் அதன் பிறகு தான் வொர்க் லைஃப் பேலன்ஸ் குறித்து நாம் கவலைப்பட வேண்டும் என தெரிவித்தாராம். அதை மீண்டும் இந்த நிகழ்ச்சியில் அவர் சுட்டிக்காட்டினார். நாராயணமூர்த்தி இந்தியர்கள் வாரம் 70 மணி நேரம் உழைத்தால் தான் நாடு முன்னேறும் என தொடர்ந்து கூறி வருகிறார்.


Click it and Unblock the Notifications