டெல்லி: புவி வெப்பமயமாதலை தடுப்பதற்காக சர்வதேச நாடுகள் இணைந்து கார்பன் வெளியீட்டை கட்டுக்குள் கொண்டு வருவது என உறுதி பூண்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக மத்திய அரசும் கார்பன் உமிழ்வை குறைக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில், இந்தியாவின் எரிசக்தி செயல்திறன் மற்றும் பாதுகாப்பு அமைப்பு அண்மையில் ஒரு வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. இதனை கார் உற்பத்தி நிறுவனங்கள் பின்பற்றினால் கார்களின் விலை கணிசமாக உயரும் என தெரிகிறது.

இந்தியாவில் உள்ள வாகன உற்பத்தியாளர்கள் அடுத்த மூன்று ஆண்டுகளில் கார்பன் உமிழ்வை மூன்றில் ஒரு பங்கு குறைக்க வேண்டும் குறைக்க வேண்டும் அல்லது அபராதங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என எரிசக்தி செயல்திறன் பணியகத்தின் (bureau of energy efficiency (BEE)) கார்ப்பரேட் சராசரி எரிபொருள் செயல் திறன் விதிமுறைகளின் (corporate average fuel efficiency norms (CAFE)) மூன்றாவது வழிகாட்டுதலின் கீழ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .
இது தொடர்பாக எக்னாமிக் டைம்ஸுக்கு பேட்டி அளித்துள்ள கார் உற்பத்தியாளர்கள், கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தி எரிபொருள் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்ற கடுமையான CAFE 3 மற்றும் CAFE 4 விதிமுறைகளை பூர்த்தி செய்து ஒரு வாகனத்தை உருவாக்குவது சவாலானது என தெரிவித்துள்ளனர்.
குறைந்த கார்பன் உமிழ்வு கொண்ட வாகனத்தை உருவாக்குவது எளிது, ஆனால் இது சாதாரண மக்களும் வாங்க கூடிய விலையில் இருக்காது தற்போது விலை நிர்ணயம் தான் மிகப்பெரிய சவால் என தெரிவித்துள்ளனர். விலை அதிகமாக இருந்தால் மக்கள் கார்களை வாங்க விரும்பமாட்டார்கள் எனவே இது சவாலானதாக இருக்கிறது என கூறியுள்ளனர்.
தற்போதைக்கு ஜூலை முதல் வாரத்திற்குள் இத்துறை சார்ந்த நிறுவனங்கள் தங்களது கருத்துக்களை சமர்ப்பிக்குமாறு எரிசக்தி செயல்திறன் பணியகம் கேட்டுக் கொண்டுள்ளது. அதன் பிறகு இறுதி வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட உள்ளன. CAFE 3 விதிமுறைகள் 2027 ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என தெரிகிறது.
எரிசக்தி செயல்திறன் பணியகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி CAFE 3 விதிமுறையின் கீழ் 1 கிலோமீட்டருக்கு 91.7 கிராம் கார்பன் டை ஆக்சைடு வெளியீடு என்ற அளவுக்குள் கொண்டு வரப்பட வேண்டும். CAFE 4 விதிமுறையின் கீழ் 1 கிலோ மீட்டருக்கு 70 கிராம் கார்பன் டை ஆக்சைடு வெளியீடு என்ற அளவுக்குள் இருக்க வேண்டும்.
இதில் CAFE 4 விதிமுறைகளுக்கு மாற மத்திய அரசு 5 ஆண்டுகள் அவகாசம் கொடுக்க ஒப்புக்கொண்டாலும் அவர்கள் குறிப்பிடக்கூடிய அந்த இலக்குகளை எட்டுவது மிக கடினமானது என கார் உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். கார்பன் உமிழ்வை குறைப்பது மட்டுமின்றி எரிபொருள் நுகர்வையும் மூன்று ஆண்டுகளுக்குள் குறைக்க வேண்டும் என வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழிகாட்டுதலின் படி, ஒரு காரின் எரிபொருள் செயல் திறன் 100 கிலோ மீட்டருக்கு 0. 2 லிட்டரை எட்டினால் 25,000 ரூபாய் அபராதம், ஒருவேளை இதைத் தாண்டினால் அபராதம் 50,000 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications