சமீபத்தில் நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளை தோற்கடித்து அரியணையை கைப்பற்றியது. இந்த தேர்தலில் பாஜக 45.8% வாக்குகளையும், இதற்கு முன்பு டெல்லியை ஆட்சி செய்து வந்த ஆம் ஆத்மி கட்சி 43.8% வாக்குகளை பெற்றன. இந்த நிலையில், பாஜக பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.
இதனையடுத்து பிப்ரவரி 19 ஆன இன்று பாஜக கட்சிக் கூட்டம் நடைபெற்றது. சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் முக்கிய வெற்றியை தொடர்ந்து 11 நாட்களுக்குப் பிறகு நடைபெற்ற இந்த கூட்டத்தில் பார்வையாளர்களான ரவிசங்கர் பிரசாத் மற்றும் ஓம் பிரகாஷ் தங்கர் ஆகியோர் தேர்வு செயல்முறையை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 48 பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுக்க கூடினர். அப்போது, ஓ.பி. தங்கர் மற்றும் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் முதலமைச்சர் பெயரை அறிவித்தனர். அந்த வகையில், புதிய முதலமைச்சராக ரேகா குப்தா என்பவரை தேர்ந்தெடுத்துள்ளனர். இவர் முதல் முறையாக ஷாலிமார் பாக் தொகுதி எம்.எல்.ஏ ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பு கவுன்சிலராக இருந்துள்ளார்.

ரேகா குப்தா ஹரியானாவின் வைஷ்ய சமூகத்தைச் சேர்ந்தவர். ரேகாவின் இளம்வயதிலேயே அவரது குடும்பம் டெல்லிக்கு வந்ததாக கூறப்படுகிறது. ரேகா குப்தா, தொழில் ரீதியாக ஒரு வழக்கறிஞர் ஆவார். ரேகா குப்தா குடும்பம் ரேகா குப்தாவின் கணவர் மனிஷ் குப்தா தொழில் ரீதியாக ஒரு தொழிலதிபர். இருவரும் 1998 ஜூன் 28 அன்று திருமணம் செய்து கொண்டனர். ரேகா குப்தாவுக்கு நிகுஞ்ச் குப்தா என்ற மகனும், ஹர்ஷிதா குப்தா என்ற மகளும் உள்ளனர்.
ரேகா குப்தா அரசியல் பயணத்தை பொறுத்தவரையில்,1992 - அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் சேர்ந்துள்ளார். 1995-96 - டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் செயலாளராகவும், 1996-97 தலைவராகவும் இருந்துள்ளார். அதனை தொடர்ந்து 2007 - வடக்கு பிதாம்பூராவிலிருந்து கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2010 - பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினரானார். 2022 - டெல்லி மாநகராட்சி மேயர் பதவிக்கு வேட்பாளராக இருந்துள்ளார்.
அதனை தொடர்ந்து 2025 டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஷாலிமார் பாக் தொகுதியிலிருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டெல்லி முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படும் நான்காவது பெண்மணி ஆனார். பாஜகவின் கடைசி டெல்லி முதல்வர் சுஷ்மா ஸ்வராஜ் ஆவார், அவர் 1998 இல் சிறிது காலம் அந்தப் பதவியை வகித்தார்.
சுஷ்மா ஸ்வராஜ் 1998 ஆம் ஆண்டு டெல்லியின் முதல்வராகவும், காங்கிரஸைச் சேர்ந்த ஷீலா தீட்சித் 1998 முதல் 2013 வரை மூன்று முறை அந்தப் பதவியை வகித்தார். மேலும் ஆம் ஆத்மியைச் சேர்ந்த அதிஷி 2020 ஆம் ஆண்டு அந்தப் பதவியை ஏற்றுக்கொண்டார்.
முதல் முறையாக எம்.எல்.ஏ.வான ரேகா குப்தா, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியால் ஆளப்படும் 18 மாநிலங்களில் பாஜகவின் ஒரே பெண் முதலமைச்சர் ஆவார். புதிய முதலமைச்சரான ரேகா குப்தாவின் பதவியேற்பு விழா நாளை, பிப்ரவரி 20 ஆம் தேதி காலை 10 மணிக்கு ராம்லீலா மைதானத்தில் நடைபெற உள்ளது.


Click it and Unblock the Notifications