கொரோனா பாதிப்பின் காரணமாக நாட்டின் முன்னணி வர்த்தகச் சாம்ராஜ்ஜியம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடுமையான வருவாய் பாதிப்புகளைச் சந்தித்துள்ளது. இதன் எதிரொலியாகச் செலவுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஊழியர்களின் சம்பளத்தைக் குறைக்க முடிவு செய்துள்ளது முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகம்.
இந்தச் செய்தி தற்போது ஊழியர்களுக்கு மத்தியில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று மாலை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது மார்ச் காலாண்டு முடிவுகளை அறிவிக்க உள்ளது. முதலீட்டாளர்கள் காலாண்டு முடிவுகளை எதிர்நோக்கி காத்துக்கொண்டு இருக்கும் இந்த வேளையில் ஊழியர்களின் சம்பள குறைப்பு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஊழியர்களின் சம்பளத்தைக் குறைக்க முடிவு செய்த முகேஷ் அம்பானி தனது மொத்த சம்பளத்தையும் இந்த வருடம் தியாகம் செய்ய முடிவு செய்துள்ளார்.
கொரோனா பாதிப்பின் காரணமாக ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமல்லாமல் நாட்டின் பல முன்னணி நிறுவனங்களின் வருவாய் மற்றும் வர்த்தகம் பாதிப்பு அடைந்துள்ள நிலையில், முகேஷ் அம்பானி ஊழியர்களின் சம்பள குறைப்பில் தானும் பங்கு கொண்டுள்ளார்.
50 சதவீத சம்பள குறைப்பு
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோர் தங்களது மொத்த சம்பளத்தில் 30 முதல் 50 சதவீத குறைப்பை எதிர்கொள்ள உள்ளனர் என ரிலையனஸ் இண்டஸ்ட்ரீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைட்ரோகார்பன் வர்த்தகம்
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஹைட்ரோகார்பன் வர்த்தகப் பிரிவில் பணியாற்றும் ஊழியர்களுக்குத் தனிப்பட்ட சம்பள குறைப்பு செய்யப்பட்டு உள்ளது. அதாவது 15 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான சம்பளத்தை வாங்கும் ஊழியர்களுக்கு 10 சதவீத சம்பள குறைப்பு குறைக்கப்பட்டு உள்ளது.
15 லட்சம் ரூபாய் கீழ் சம்பளம் வாங்குவோருக்கு எவ்விதமான சம்பள குறைப்பும் இல்லையெனத் தெரிவித்துள்ளது ரிலையன்ஸ் நிர்வாகம்.
போனஸ்
மேலும் ரிலையன்ஸ் ஊழியர்களுக்கான செயல்திறன் அடிப்படையிலான சம்பளம் மற்றும் போனஸ் ஆகியவை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது எனவும் ரிலையன்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இன்று காலாண்டு முடிவுகளை வெளியிடும் முன்பாக ரிலையன்ஸ் ஊழியர்களின் சம்பள குறைப்பை அறிவித்துள்ள நிலையில், முதலீட்டாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிகப் பாதிப்பு
கொரோனா பாதிப்புக் காலத்தில் வர்த்தகம் மற்றும் வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ள நிலையில், நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் தேவை அதிகளவிலான சரிந்துள்ளது. இதனால் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஹைட்ரோகார்பன் வர்த்தகமும் இதன் மூலம் கடுமையான வருவாய் மற்றும் வர்த்தகப் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.
ஜியோ மற்றும் ஜியோமார்ட்
ஆனால் இக்காலகட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஜியோ மார்ட் வர்த்தகம் சிறப்பான முறையில் இயங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த காலாண்டுகளை விடவும் டெலிகாம் சேவை நிறுவனமான ஜியோவின் வருவாய் மற்றும் லாபம் இந்தக் காலாண்டில் இரட்டிப்பாக உயர்ந்திருக்கும் எனச் சந்தை கணிப்புகள் கூறுகிறது.


Click it and Unblock the Notifications