முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமம் fmcg பிரிவில் தன்னை முதலிடத்திற்கு கொண்டு வருவதற்கான பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறது. இதற்காக ரிலையன்ஸ் கன்சூமர் ப்ராடக்ட்ஸ் லிமிடெட் (RCPL) நிறுவனம், உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சகத்துடன் ரூ. 40,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
நாடு முழுவதும் ஒருங்கிணைந்த உணவு உற்பத்தி வசதிகளை அமைப்பதற்காக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், உலக உணவு இந்தியா 2025 நிகழ்வில் கையெழுத்தானது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் "செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ் மற்றும் நிலையான தொழில்நுட்பங்களுடன் ஆசியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த உணவுப் பூங்காக்களை" உருவாக்குவோம்” எனத் தெரிவித்திருந்தது.

ரிலையன்ஸ் ரீடெய்லில் இருந்து பிரிந்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நேரடி துணை நிறுவனமாக உருவான RCPL 2022ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் அதிவேகமாக வளரும் fmcg நிறுவனங்களில் ஒன்றாக இது இருக்கிறது. நிறுவனம் தொடங்கப்பட்ட மூன்று ஆண்டுகளில் ரூ. 11,000 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, RCPL மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள காட்டோல் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் கர்நூல் ஆகிய இடங்களில் உணவுப் பொருட்கள் மற்றும் பானங்களுக்கான ஒருங்கிணைந்த ஆலைகளை அமைக்க ரூ. 1,500 கோடிக்கும் மேல் முதலீடு செய்யும்.
ஆகஸ்ட் மாத AGM-ல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இயக்குனர் ஈஷா அம்பானி, RCPL நிறுவனம் ரிலையன்ஸ் குழுமத்தின் "வளர்ச்சி என்ஜின்களில்" ஒன்று என்றும், ஐந்து ஆண்டுகளில் ரூ. 1 லட்சம் கோடி வருவாய் ஈட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஏற்கனவே ரிலையன்ஸின் RCPL நிறுவனம் , Tagz Foods உட்பட பல நுகர்வோர் பிராண்டுகளை கையகப்படுத்தியுள்ளது. மேலும், Campa, Independence, Alan's, Enzo மற்றும் Ravalgaon போன்ற பெயர்களில் சோப்பு முதல் கோலா வரை பல்வேறு பிராண்டுகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
நேற்று தான் ரிலையன்ஸ் கன்ஸியூமர் நிறுவனம் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் மிகப்பெரிய உணவு உற்பத்தி மற்றும் பேக்கேஜிங் ஆலை அமைக்க ஒப்பந்தம் செய்தது. அல்லிகுளம் சிப்காட் தொழில் பூங்காவில் ரிலையன்ஸ் குழுமம் இந்த உணவு பொருட்கள் உற்பத்தி ஆலையை அமைத்து 2000க்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என அறிவித்தது.
தற்போது ஆந்திரா, மகாராஷ்ட்ராவிலும் உணவு பூங்காக்களை அமைக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. தொலைதொடர்பு, பெட்ரோ கெமிக்கல் என பல துறைகளிலும் ஜாம்பவானாக இருக்கும் ரிலையன்ஸ் fmcg சந்தையை கையகப்படுத்துவதில் தீவிரமாக இருப்பது இதன் மூலம் தெரிய வருகிறது.


Click it and Unblock the Notifications