ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் FMCG பிரிவான ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் லிமிடெட் கேம்பா கோலா என்ற குளிர்பானத்தின் மூலம் இந்திய குளிர்பான சந்தையில் கால் பதித்தது. அடுத்த கட்டமாக பிஸ்கட் தயாரிப்பிலும் தீவிரமாக களமிறங்கியுள்ளது. இண்டிபெண்டன்ஸ் என்ற பிராண்டின் கீழ் 9 புதிய ரக பிஸ்கட்டுகளை அறிமுகம் செய்துள்ளது.
முதற்கட்டமாக தமிழ்நாட்டில் இந்த பிஸ்கட்டுகள் அறிமுகமாகிறது. அதன் தொடர்ச்சியாக நாட்டின் பிற மாநிலங்களுக்கும் விநியோகிக்கப்படவுள்ளது. விற்பனை விலையை பொறுத்தவரை 5 ரூபாய் சின்ன பாக்கெட்டுகள், 10 ரூபாய் பாக்கெட்டுகள் மற்றும் 40, 125 ரூபாய் பேமிலி பேக் என வெவ்வேறு விலைகளில் கிடைக்கிறது.

பவர் அப், பட்டர் பிளிஸ், மில்கி பவர், மேரி பிரைம் போன்ற சாதாரண பிஸ்கட்டுகளும், கோகோ வெண்ணிலா. சாக்லேட் கிரீம் யம் ஆரஞ்சு, சாக்லேட் கிரீம் யம் சாக்கோ போன்ற கிரீம் பிஸ்கட்டுகளும் அறிமுகமாக்கியுள்ளன.
ஏற்கனவே பிஸ்கட் சந்தையில் பல முன்னணி நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. 2024-ஆம் நிதியாண்டில் பிஸ்கட் சந்தையின் மொத்த மதிப்பு ரூ.55,100 கோடியாக உள்ளது. இது வருகின்ற 2029-ஆம் நிதியாண்டிற்குள் ரூ.90,300 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிட்டானியா பிராண்டின் கீழ் மேரி கோல்ட், மில்க் பிக்கீஸ், டைகர், நியூட்ரி சாய்ஸ், குட் டே என மக்களின் மனதைக் கவரும் வகையிலான பல தயாரிப்புகள் இருக்கிறது. பார்லே பிராண்ட் பார்லே ஜி என்ற ஒரே ஒரு பிஸ்கட்டின் மூலம் பலரையும் தன் வசம் கொண்டுள்ளது. ஐடிசி-யின் கீழ் சன் ஃபீஸ்ட், டார்க் பேண்டஸி, மாம்ஸ் மேஜிக் போன்ற பிஸ்கட்டுகள் விற்பனையாகிறது.
ஏற்கனவே இந்த பிராண்டுகள் அனைத்தும் 5 ரூபாய் விலைக்கு பிஸ்கட் வழங்கி வரும் சூழலில் புதிதாக களம் இறங்கியுள்ள ரிலையன்ஸ் நிறுவனம் குறைந்த விலையை மட்டும் வைத்து நுகர்வோரை கண்டிப்பாக ஈர்க்க முடியாது. இதை அந்நிறுவனத்தின் செயல் அதிகாரியான ரஷீத் ஹர்காவே ஒப்புக்கொண்டுள்ளார். எனவே இனிவரும் நாட்களில் ரிலையன்ஸ் வெறும் விலையை மட்டும் நம்பி இருக்காமல் தரம், சுவை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ரீடைல் ஷாப்கள், ஹோல்சேல் நெட்வொர்க், ஈ-காமர்ஸ் தளங்கள் இயங்கி வருகிறது. இதையெல்லாம் பயன்படுத்தி இண்டிபெண்டன்ஸ் பிஸ்கட்களை நிறுவனம் பிரபலமாக்கிவிடும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் ஏற்கனவே பிஸ்கட் துறையில் பல போட்டி இருக்கிறது. இதில் ஜியோவை போல இலவசமாக வழங்கி பின்னர் லாபம் ஈட்ட முடியாது.
ஏனெனில் இவற்றை அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்தால் தான் லாபம் கிடைக்கும். அப்படி இருக்கையில் பல முன்னணி பிராண்டுகள் ஏற்கனவே ஆதிக்கம் செலுத்தும் பிஸ்கட் துறையில் இண்டிபெண்டன்ஸ் பிஸ்கட் தங்களுக்கு என ஒரு இடத்தை பிடிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications
