இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் உற்பத்திக்கு அதிகளவிலான முக்கியத்துவம் அளித்து வரும் இதேவேளையில், உலகில் மிகப்பெரிய பற்றாக்குறையாகவும், எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் தயாரிக்க முக்கியச் சேவையாக இருக்கும் செமிகண்டக்டர் சிப்-ஐ இந்தியாவில் தயாரிக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது.
குறிப்பாகச் செமிகண்டக்டர் சிப் தயாரிப்பில் முன்னோடியாக இருக்கும் சர்வதேச முன்னணி நிறுவனங்களுக்கு இந்தியாவில் சிப் உற்பத்தி தளத்தை அமைக்க அழைப்பு விடுத்தது மட்டும் அல்லாமல் மிகப்பெரிய அளவிலான ஊக்கத் தொகை திட்டத்தையும் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்கப்போகும் ISMC ANALOG நிறுவனத்தின் பெரும் தொகையை ஐடி சேவை நிறுவனமான ஹெச்சிஎல் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் பெரும் தொகையை முதலீடு செய்ய உள்ளது.
ISMC ANALOG நிறுவனம்
செமிகண்டக்டர் சிப் தயாரிக்க இஸ்ரேல் நாட்டின் டவர் செமிகண்டக்டர் மற்றும் மும்பையின் நெக்ஸ்ட் ஆர்பிட் வென்சர் கூட்டணியில் ISMC ANALOG இந்தியாவில் பெரும் தொகை முதலீட்டில் தொழிற்சாலை அமைக்க முடிவு செய்துள்ளது.
30% பங்குகள்
ISMC ANALOG நிறுவனத்தில் ஹெச்சிஎல் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலா 30 சதவீத பங்குகளைக் கைப்பற்ற முடிவு செய்துள்ளது. இதற்காக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஷிவ் நாடார்-ன் ஹெச்சிஎல் நிறுவனங்களின் கிளை நிறுவனத்தின் வாயிலாகச் சுமார் 4000 கோடி ரூபாய் வரையிலான தொகையை முதலீடு செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
PLI திட்டம்
மத்திய அரசின் 76000 கோடி ரூபாய் மதிப்பிலான செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு துறைக்கான PLI திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 3 நிறுவனங்களில் ISMC ANALOG நிறுவனமும் ஒன்று. ISMC ANALOG நிறுவனம் மைசூரில் 3 பில்லியன் டாலர் மதிப்பிலான செமிகண்டக்டர் சிப் ஃபேப்ரிகேஷன் தொழிற்சாலையை அமைக்க உள்ளது.
ஹெச்சிஎல்
இந்திய ஐடி சேவை துறையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் ஹெச்சிஎல் சில மாதங்களுக்கு முன்பு விப்ரோ நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி 3வது பெரிய ஐடி நிறுவனமாக உயர்ந்தது. குறிப்பாக ஷிவ் நாடார் ஹெச்சிஎல் நிர்வாகத்தைத் தனது ஓரே மகளான ரோஷினி நாடார் கையில் கொடுத்த பின்பு ஹெச்சிஎல் வளர்ச்சியின் வேகம் சிறப்பாக உள்ளது.
மென்பொருள் சேவை
இந்த முதலீடு உறுதியாகும் பட்சத்தில் ஹெச்சிஎல் வரலாற்றில் மிகப்பெரிய முதலீடாக இருக்கும், மேலும் ISMC ANALOG நிறுவனத்துடனான கூட்டணி மூலம் மென்பொருள் சேவை நிறுவனம் உற்பத்தித் துறையிலும் இறங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
இதேவேளையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பல துறையில் இயங்கினாலும் சமீபத்தில் எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் உற்பத்திக்காக அமெரிக்காவின் சான்மினா கார்ப் நிறுவனத்துடன் இணைந்து சென்னையில் மிகப்பெரிய தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
உற்பத்தி துறை
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கச்சா எண்ணெய் முதல் ரீடைல் சந்தை வரையில் பல துறையில் முதலீடு செய்து தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வரும் நிலையில், கடந்த சில மாதங்களாக உற்பத்தித் துறையின் மீது அதிகப்படியான கவனத்தைச் செலுத்தி வருகிறது. இதில் முக்கியமான முடிவு தான் செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு.
நிர்வாகக் குழு
இந்த நிலையில் ISMC ANALOG நிறுவனம் தனது நிர்வாகக் குழுவில் முக்கிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணியில் ஈட்டுப்பட்டுக் கொண்டு இருக்கும் வேளையில் ஹெச்சிஎல் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் 4000 கோடி ரூபாய் முதலீடும், தலா 30 சதவீத பங்கு கைப்பற்றலும் முக்கியமானதாக உள்ளது.


Click it and Unblock the Notifications