முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பங்குச்சந்தை வரலாற்றில் ஒரு புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. பட்டியலிடப்படாத அதன் தொலைத்தொடர்பு துணை நிறுவனமான ஜியோ இன்ஃபோகாம் அறிவித்த கட்டண உயர்வு காரணமாக, ரூ. 21 லட்சம் கோடி சந்தை மதிப்பைக் கடந்த முதல் நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மாறியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக இருந்து வரும் ரிலையன்ஸ், வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் ரூ.2,119,009.71 கோடி சந்தை மதிப்பை கடந்த நிறுவனமாக மாறியது. பங்குச்சந்தையில் புதிய உச்சத்தைத் தொட்ட சமயத்தில், ரிலையன்ஸ் பங்குகள் ரூ. 3,161.45 என்ற 52 வார உச்சத்தைத் தொட்டன. ஆனால் பின்னர் சற்று குறைந்து முந்தைய தினத்தின் விலையை விட 2.31 சதவீதம் அதிகரித்து ரூ 3,131.85 என்ற விலையில் முடிவடைந்தன.

இந்த மாத தொடக்கத்தில் கிட்டத்தட்ட 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் "BUY" ரேட்டிங்-ஐ கொடுத்துள்ளது. இது, ரிலையன்ஸ் பங்குகள் விலை தொடர்ந்து உயரும் என்ற எதிர்பார்ப்பை சுட்டிக் காட்டுகிறது. பெரும்பாலான நிறுவனங்கள் ரிலையன்ஸ் பங்குகளுக்கான இலக்கு விலையை ரூ. 3,380 முதல் ரூ. 3,580 வரை நிர்ணயித்துள்ளனர். ஜேஃப்ரீஸ் என்ற வெளிநாட்டு நிறுவனம், முன்னதாக இருந்த ரூ. 3,380 என்ற இலக்கு விலையை ரூ. 3,580 ஆக உயர்த்துள்ளது.
இன்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 2.3 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. ஜியோ நிறுவனம் ஜூலை 3-ஆம் முதல் அமலுக்கு வரும் புதிய திட்டங்களை அறிவித்ததே இதற்குக் காரணம். இந்த புதிய திட்டங்கள் வரம்பற்ற பயன்பாட்டை வழங்குகின்றன. மேலும் ரீசார்ஜ் கட்டணங்கள் 17 முதல் 27 சதவீதம் வரை உயர இருக்கிறது. இதன் மூலம், ஏற்கனவே டெலிகாம் துறையில் முன்னணியில் இருக்கும் ஜியோவின் சராசரி வருவாய் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நிறுவனத்தின் லாபத்தையும் அதிகரிக்கச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய கட்டணங்கள் 189 ரூபாய் முதல் 3599 ரூபாய் வரை இருக்கும். 189 ரூபாய் திட்டத்தில் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 3599 திட்டத்தில் ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
ஜூன் 28ஆம் தேதி அன்று, ஜேஃப்ரீஸ் நிறுவனம் ரிலையன்ஸின் விலை இலக்கை 3,380 ரூபாயில் இருந்து 3,580 ரூபாயாக உயர்த்தியது. இது வியாழன் முடிவில் இருந்து விலையை விட சுமார் 17 சதவீதம் உயர்வைக் குறிக்கிறது. ஜியோவின் வருவாய் மற்றும் லாபம் 2024-ஆம் நிதியாண்டு முதல் 2027-ஆம் நிதியாண்டு வரை 18 சதவிகிதம் மற்றும் 26 சதவிகிதம் வளரும் என்றும் மதிப்பிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications