இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மார்ச் மாதத்தில் மட்டும் ரஷ்யாவிடம் இருந்து ஒரு நாளைக்கு 5,32,700 பேரல்கள் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து இருக்கிறது.
பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும் போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மார்ச் மாதத்தில் ரஷ்யாவிடம் இருந்து 17.3% கூடுதலாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து இருக்கிறது. மார்ச் மாதத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் இறக்குமதி செய்து சுத்திகரிப்பு செய்த கச்சா எண்ணெயில் 48.5% ரஷ்யாவை சேர்ந்த எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து வாங்கப்பட்டிருப்பதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடுகிறது.

அதே வேளையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் மாதாந்திர இறக்குமதி விகிதம் ஒரு நாளைக்கு 1.1 மில்லியன் பேரல்கள் என 19% குறைந்து இருக்கிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சில எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டதே இறக்குமதி குறைந்ததற்கு காரணம். ரஷ்யாவை சேர்ந்த அரசுக்கு சொந்தமான ராஸ்நெஃப்ட் நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஒரு நாளைக்கு 5 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய் அனுப்பி வைப்பதாக ஒப்பந்தம் செய்திருக்கிறது.
மார்ச் மாதத்தில் மட்டும் இந்தியா ஒட்டுமொத்தமாக ஒரு நாளைக்கு 5.3 மில்லியன் பேரல்கள் இறக்குமதி செய்திருக்கிறது. இது பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது 1.3% அதிகமாகும். கடந்து ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது 3.8 சதவீதம் அதிகமாகும். 2024 -25 ஆம் ஆண்டில் இந்தியா சராசரியாக ஒரு நாளைக்கு 4.88 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணையை இறக்குமதி செய்து இருக்கிறது. எனவே இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது ஐந்து சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்யும் நாடுகளில் முதலிடத்தில் ரஷ்யா இருக்கிறது, இரண்டாவது இடத்தில் ஈராக் மூன்றாவது இடத்தில் சவுதி அரேபியா இருக்கிறது. உலக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் நுகர்வில் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா இருக்கிறது. இதில் பெரும்பாலான எண்ணெய் நாம் ரஷ்யாவிடம் இருந்து தான் இறக்குமதி செய்கிறோம்.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் ஏற்பட்டதை தொடர்ந்து மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்தன. மேலும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தி கொண்டன. இதனை அடுத்து ரஷ்ய நிறுவனங்கள் இந்திய நிறுவனங்கள் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்கின்றன. எனவே இந்திய நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் ரஷ்ய நிறுவனங்களிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குகின்றன.


Click it and Unblock the Notifications