இந்தியாவின் முன்னணி வர்த்தக குழுமங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், தனது செப்டம்பர் காலாண்டு முடிவுகளை அறிவித்துள்ளது.
அதன்படி கடந்த செப்டம்பர் காலாண்டில் அதன் நிகர லாபம் 11.5% அதிகரித்து, 13,680 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
எண்ணெய் முதல் கெமிக்கல், டிஜிட்டல் சேவையில் ஈடுபட்டு வரும் இந்த நிறுவனம், சில்லறை வர்த்தகத்தினை ஆஃப்லைன் மட்டும் அல்லாது, ஆன்லைனிலும் சிறப்பாக விரிவாக்கம் செய்து வருகின்றது.
நிகர லாபம்
மொத்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சில்லறை வர்த்தகம் மட்டும் அல்ல, அதன் எண்ணெய் மற்றும் கெமிக்கல், ஜியோ, டிஜிட்டல் சேவைகள் என பலவகையிலும் வணிகத்தினை விரிவாக்கம் செய்து வருகின்றது. இதற்கிடையில் தான் இந்த நிறுவனத்தின் லாப விகிதமானது செப்டம்பர் காலாண்டில் 13,680 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த காலாண்டில் 12,273 கோடி ரூபாய் லாபம் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
வருவாய் விகிதம்
இதற்கிடையில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் விகிதமானது 1.58 லட்சம் கோடி ரூபாய் ஆக அதிகரித்துள்ளது. இதுவே கடந்த ஜூன் காலாண்டில் 1.4 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் எபிடா விகிதம், 26,020 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த முதல் காலாண்டில் 23,368 கோடி ரூபாயாக இருந்தது.
ஜியோவின் லாபம் எவ்வளவு?
ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருவாய் மற்றும் மார்ஜின் விகிதம் நல்ல வளர்ச்சியினை கண்டுள்ளது. கூடுதலாக ஜியோ நிறுவனமும் தொடர்ந்து நல்ல லாபத்தினை ஈட்டி வருகின்றது. குறிப்பாக செப்டம்பர் காலாண்டில் 3,728 கோடி ரூபாய நிகர லாபத்தினை கண்டுள்ளது. இது கடந்த காலாண்டினை காட்டிலும் 23.5% அதிகம். இதே மொத்த வருவாய் விகிதமானது 15.2% அதிகரித்து, 23,222 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஜியோ அர்பு எவ்வளவு?
கடந்த செப்டம்பர் 30வுடன் முடிவடைந்த காலாண்டில் ஜியோவின் மொத்த வாடிக்கையாளர் விகிதம் 42.95 கோடியாகும். செப்டம்பர் காலாண்டில் மட்டும் 2.4 கோடி வாடிக்கையாளர்கள் ஜியோவில் இணைந்துள்ளனர். இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் அர்பு விகிதம், அதாவது ஒரு வாடிக்கையாளரின் சராசரி வருவாய் 143.6 ரூபாயாகும்.
ரீடெயில் லாபம் எவ்வளவு?
கொரோனாவில் இருந்து தற்போது தேவையானது மீளத் தொடங்கியுள்ள நிலையில், சில்லறை வர்த்தத்தில் நிகர லாபம் 74.2% அதிகரித்து, 1,695 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே சில்லறை வர்த்தகத்தின் மொத்த வருவாய் விகிதமானது 10.5% அதிகரித்து, 45,426 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
எரிபொருள் வணிகம்
தற்போது நாட்டில் எரிபொருளுக்கான தேவையானது அதிகரித்து வரும் நிலையில், அம்பானியின் எண்ணெய் வர்த்தகம் நலல் வருவாயை காண வழிவகுத்துள்ளது. அதோடு சில்லறை வர்த்தகம் நல்ல வளர்ச்சி கண்டு வருகின்றது. குறிப்பாக ஆஃப்லைனில் மட்டும் அல்லாது, ஆன்லைனிலும் வளர்ச்சி காணத் தொடங்கியுள்ளது.
மிக்க மகிழ்ச்சி
இது குறித்து முகேஷ் அம்பானி, தொற்று நோய் காலத்திலும் நிறுவனம் சிறப்பான செயல்திறனை பதிவு செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இது உலகளாவிய பொருளாதாரம் வலுவாக மீட்சி கண்டு வருவதையே சுட்டிக் காட்டுகின்றது. எங்களின் அனைத்து வணிகங்களும் கொரோனாவின் முந்தைய நிலையை எட்டியுள்ளன. சில்லறை வர்த்தக பிரிவில் நல்ல வளர்ச்சி கண்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
பங்கு விலை நிலவரம்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் லாபம் அதிகரித்திருந்தாலும், செப்டம்பர் காலாண்டு முடிவுகள் சந்தைக்கு பிறகே வந்துள்ளன. இதற்கிடையில் இன்றைய முடிவில் இந்த நிறுவன பங்கின் விலையானது என்.எஸ்.இ-யில் சற்று அதிகரித்து, 2,627 ரூபாயாகவும், பிஎஸ்இயில் 2627.05 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications