இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவராக இருக்கும் முகேஷ் அம்பானி ஜியோ பைனான்சியல் சர்விச்ஸ் தனியாக பிரிந்து முதலீட்டாளர்களுக்கு பெரிய ஜாக்பாட் கொடுத்தாலும், ஜூன் காலாண்டின் மோசமாக நிதி முடிவுகள் மூலம் கொடுத்த ஜாக்பாட்-ஐ திரும்ப பெற்றுள்ளார்.
வாரத்தின் கடைசி நாளான இன்று வர்த்தக நேரம் முடிந்த பின்பு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ஜூன் காலாண்டு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது. இக்காலாண்டில் ரிலையன்ஸ் லாபத்தில் இரண்டு இலக்கு சரிவையும், வருவாயில் 1 சதவீத சரிவையும் எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கணிப்புகளை உண்மையாகியுள்ளது.

ஜூன் காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் மொத்த லாபம் கடந்த வருடத்தை காட்டிலும் 11 சதவீதம் சரிந்து 16,011 கோடி ரூபாய் மட்டுமே பெற்றுள்ளது. இதேபோல் மொத்த வருவாய் 5.3 சதவீதம் வரையில் சரிந்து 2.11 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
இந்த மோசமான நிலையை சமாளிக்க முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகம் தனது முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்கிற்கு சுமார் 9 ரூபாய் ஈவுத்தொகையை கொடுக்க ஒப்புதல் அளித்துள்ளது. ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தை தனியாக பிரித்த பின்பு இந்த ஈவுத்தொகை அளித்துள்ளது சிறப்பான விஷயமாக உள்ளது. இது திங்கட்கிழமை வர்த்தகத்தில் பெரும் சரிவு ஏற்படுவதை கட்டாயம் கட்டுப்படுத்தும்.
ஜூன் காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் O2C வர்த்தகத்தின் வருவாய் 18 சதவீதம் வருடாந்திர அடிப்படையில் சரிந்து 1.33 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இப்பிரிவு வர்த்தகம் தான் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் 63 சதவீத வருவாய் பங்கீட்டை கொண்டு உள்ளது. இக்காலக்கட்டத்தில் ரிலையன்ஸ் ரீடைல் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனத்தின் வர்த்தகம் மட்டும் சரிந்திருந்தால் மிகவும் மோசமான காலாண்டாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-க்கு அமைத்திருக்கும்.

ஜூன் காலாண்டில் ரிலையன்ஸ் ரீடைல் பிரிவின் வருவாய் 20 சதவீதம் அதிகரித்து 69,962 கோடி ரூபாயாக உள்ளது, இதேபோல் டிஜிட்டல் பிரிவின் வருவாய் 13 சதவீதம் வருடாந்திர அடிப்படையில் அதிகரித்து 32,077 கோடி ரூபாயாக உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் O2C வர்த்தகத்தின் வருவாய் பெரிய அளவில் குறைந்தாலும், இக்குழுமத்தின் ஆப்ரேட்டிங் லாபம் 5 சதவீதம் உயர்ந்து 41,982 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜூன் 30ஆம் தேதி முடிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மொத்த கடன் 3.14 லட்சம் கோடி ரூபாயில் இருந்து காலாண்டு அடிப்படையில் 3.19 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மேலும் பணம் மற்றும் பணத்திற்கு இணையானவற்றின் அளவு 1.88 லட்சம் கோடி ரூபாயில் இருந்து காலாண்டு அடிப்படையில் 1.92 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications