இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இன்று செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது.
இன்றைய வர்த்தக முடிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 1.16 சதவீதம் வரையில் சரிந்து 2,471.95 ரூபாய் அளவில் முடிந்துள்ளது. இந்நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் செப்டம்பர் காலாண்டில் லாபத்தைச் சரிவைச் சந்தித்துள்ளது முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் செப்டம்பர் காலாண்டில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 0.2 சதவீதம் குறைவான லாபத்தைப் பதிவு செய்துள்ளது. சந்தை வல்லுனர்கள் 2 இலக்க லாப வளர்ச்சியைக் கணித்திருந்த நிலையில் சரிவைச் சந்தித்துள்ளது ரீடைல் முதலீட்டாளர்கள் முதல் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் வரையில் அதிர்ச்சி அளித்துள்ளது.

வருவாய்
முகேஷ் அம்பானி தலைமையில் இயங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் செப்டம்பர் காலாண்டில் 0.2 சதவீத சரிவுடன் 13,656 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்றுள்ளது. ஆனால் வருவாய் அளவு 34 சதவீதம் உயர்ந்து 2.32 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. சந்தை வல்லுனர்களின் வருவாய் கணிப்பு 2.18 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

3 பிரிவுகள்
இக்காலாண்டில் ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் O2C பிரிவில் வருவாய் 32 சதவீதம் அதிகரித்து 1.59 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இதேபோல் ரீடைல் பிரிவின் வருவாய் 43 சதவீதம் அதிகரித்து 64,936 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் வருவாய் 21 சதவீதம் உயர்ந்து 29,558 கோடி ரூபாயாக உள்ளது.

O2C பிரிவு
O2C பிரிவின் ஆப்ரேட்டிங் மார்ஜின் அளவு சுத்திகரிப்பில் லாபம் குறைந்த காரணத்தால் பாதிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் மத்திய அரசின் windfall டாக்ஸ் வாயிலாகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் இப்பிரிவின் EBITDA அளவு 6 சதவீதம் குறைந்து 11,968 கோடி ரூபாயாக உள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ
ரிலையன்ஸ் ஜியோவின் ARPU அளவு ஜூன் காலாண்டில் 175.7 ரூபாயாக இருந்த நிலையில் செப்டம்பர் காலாண்டில் 177.2 ரூபாயாக உயர்ந்துள்ளது. இக்காலாண்டில் ஜியோ 77 லட்சம் வாடிக்கையாளர்களைப் புதிதாகச் சேர்த்துள்ளது, இதன் மூலம் ரிலையன்ஸ் ஜியோவின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 42.76 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.