இந்தியாவின் பெரும் பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2026ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டு நிதியியல் முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஐடி நிறுவனங்களை தற்போது பிற முக்கிய துறைகளும் காலாண்டு முடிவுகளை வெளியிட துவங்கியுள்ளது. இந்த வகையில் இன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது காலாண்டு முடிவுகளை தனித்தனி பிரிவுகளாக பிரிவு வெளியிட்டு உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்பது ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் இல்லாமல் ஜியோ, ரிலையன்ஸ் ரீடைல், கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகம் என அனைத்தையும் உள்ளடக்கியது. இந்த நிலையில் 2ஆம் காலாண்டில் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 10 சதவீதம் உயர்ந்து 18,165 கோடி ரூபாயாக உள்ளது, இது கடந்த ஆண்டு அதே காலத்தில் இருந்த 16,563 கோடி ரூபாயை விட அதிகமாகும்.

செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆப்ரேட்டிங் வருவாய் 2.59 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது, இது கடந்த ஆண்டு 2.35 லட்சம் கோடி ரூபாயை விட 10 சதவீதம் அதிகம். மேலும் மொத்த வருவாய் 2.83 லட்சம் கோடி ரூபாயாக பதிவாகியுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்த காலாண்டில் EBITDA அதாவது வட்டி, வரி, தேய்மானம் மற்றும் அமோர்டைசேஷன் முன்பான லாபம் அளவு 50,367 கோடி ரூபாயாக உள்ளது, இது கடந்த ஆண்டு அதே காலத்தை விட 15 சதவீதம் அதிகமாகும். மேலும் EBITDA மார்ஜின் 17.8 சதவீதமாக இருக்கிறது, இது முந்தைய ஆண்டு அளவை விட 0.80 சதவீதம் அதிகமாகும்.

காலாண்டு ஒப்பீடு
ஜூன் காலாண்டுடன் ஒப்பிடுகையில், ரிலையன்ஸின் செப்டம்பர் காலாண்டின் நிகர லாபம் 33 சதவீதம் குறைந்து 18,165 கோடி ரூபாயாக உள்ளது, இது முதல் காலாண்டில் இருந்த 26,994 கோடி ரூபாயை விட குறைவு. இருப்பினும், செயல்பாட்டு வருவாய் 4 சதவீதம் உயர்ந்து 2.59 லட்சம் கோடி ரூபாயாக பதிவாகியுள்ளது, இது முந்தைய காலாண்டின் 2.49 லட்சம் கோடி ரூபாயை விட அதிகம்.
O2C துறை வளர்ச்சி
ரிலையன்ஸின் முக்கிய வர்த்தக பிரிவான கச்சா எண்ணெய் முதல் கெமிக்கல் (ஓ2சி) பிரிவின் வருவாய் வருடாந்திர அடிப்படையில் 3.2 சதவீதம் உயர்ந்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ-பிபி எரிபொருள் ரீடைல் விற்பனை பெரிய அளவில் இக்காலக்கட்டத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது. இதில் முக்கியமாக உயர் வேக டீசல் (எச்டிஎஸ்) அளவு 34 சதவீதமும், மோட்டார் ஸ்பிரிட் (எம்எஸ்) அளவு 32 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளது.

O2G துறை வளர்ச்சி
எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில், வருவாய் 2.6 சதவீதம் குறைந்துள்ளது. இது, கேஜிடி6 திட்டத்தில் உற்பத்தி குறைந்தது மற்றும் கண்டென்சேட் விலை குறைவு போன்ற காரணங்களால் ஏற்பட்டது. இருப்பினும், கேஜிடி6 வாயு விலை உயர்வு மற்றும் சிபிஎம் அளவு அதிகரிப்பு ஆகியவை இந்த சரிவை ஓரளவுக்கு ஈடுகட்டியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ:
ரிலையன்ஸ் ஜியோவின் நிகர லாபம் 13 சதவீதம் உயர்ந்து 7,379 கோடி ரூபாயாக உள்ளது. இக்காலாண்டில் வருவாய் 15 சதவீதம் வளர்ச்சியுடன் 36,332 கோடி ரூபாயாக உள்ளது. EBITDA 18,757 கோடி ரூபாயாக 18 சதவீதம் உயர்ந்து, லாப மார்ஜின் 1.4 சதவீதம் உயர்ந்து 51.6 சதவீதமாக மேம்பட்டுள்ளது. ஏஆர்பியு 211.4 ரூபாயாகவும், மாதாந்திர தரவு பயன்பாடு அளவு தலா ஒரு வாடிக்கையாளர்களுக்கு 38.7 ஜிபியாகவும் உயர்ந்துள்ளது. இக்காலாண்டில் 8.3 மில்லியன் புதிய வாடிக்கையாளர்களுடன், மொத்த எண்ணிக்கை 500 மில்லியனை தாண்டியுள்ளது.
ரிலையன்ஸ் ரீடைல்
ரிலையன்ஸ் ரீடைல் பிரிவு 3,457 கோடி ரூபாய் இலாபத்துடன் 22 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. வருவாய் 19 சதவீதம் உயர்ந்து 79,128 கோடி ரூபாயாக உள்ளது. ஈபிடா 6,816 கோடி ரூபாயாகவும், மார்ஜின் 8.6 சதவீதமாகவும் உள்ளது. ஜியோமார்ட் சுமார் 5.8 மில்லியன் புதிய வாடிக்கையாளர்களை சேர்த்து இக்காலாண்டில் 120 சதவீத வளர்ச்சி பதிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications