உத்தரபிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரக்கூடிய மகா கும்பமேளாவை பயன்படுத்தி கொண்டு முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் புதிய பிராண்டிங் முயற்சியில் இறங்கியுள்ளது.
முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தன்னுடைய துணை நிறுவனமான ரிலையன்ஸ் கன்சியூமர் ப்ராடக்ட்ஸ் லிமிடெட் எனப்படும் ஆர்பிசிஎல் நிறுவனத்தின் வாயிலாக பிரயாக்ராஜில் கேம்பா ஆசிரமம் என்ற பெயரில் ஒரு பிரத்தியேக இடத்தை அமைத்துள்ளது.

இதன்படி கும்பமேளாவிற்கு வருகை தரக்கூடிய பக்தர்கள் அமைதியான சூழலையும் புத்துணர்ச்சியையும் பெறக்கூடிய ஒரு தனித்துவமான இடமாக இந்த கேம்பா ஆசிரமம் இருக்கும் என ஆர்பிசிஎல் தெரிவித்துள்ளது.
கும்பமேளா நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கோடிக்கணக்கான மக்கள் உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜூக்கு வருகை தந்த வண்ணம் இருக்கின்றனர். அவர்களுக்கு உதவக் கூடிய வகையில் கும்பமேளா நடைபெறும் இடத்தில் போக்குவரத்துக்கான திசை அடையாளங்கள் மற்றும் பலகைகளையும் ரிலையன்ஸ் நிறுவனம் ஆங்காங்கே நிறுவி இருக்கிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான பக்தர்கள் பயன்பெறுவார்கள் என ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவிக்கிறது.
அண்மையில் தான் ரிலையன்ஸ் நிறுவனம் கேம்ப கோலா என்ற பானத்தை அறிமுகம் செய்தது. இந்த பெயரை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் கும்பமேளா நிகழ்வில் பயன்படுத்தப்படும் படகுகளுக்கு கேம்பா என பெயர் சூட்டி இருக்கிறதாம். இந்த நிகழ்வின் மூலம் கோடிக்கணக்கான மக்களிடம் தங்களுடைய கேம்பா என்கிற பிராண்ட் சென்று சேரும் என ஆர்பிசிஎல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கேத்தன் மோடி தெரிவித்துள்ளார்.
இத்தகைய பாரம்பரியத்தை பாதுகாத்து மேம்படுத்துவதன் மூலம் இந்திய நுகர்வோருக்கு சேவை செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என கேதன் மோடி தெரிவித்துள்ளார். மகா கும்பமேளாவில் தங்கள் நிறுவனம் பங்கேற்பது இந்த ஆன்மீக நிகழ்வுக்கு நாங்கள் செலுத்தும் மரியாதை எனக் கூறியுள்ளார். 2025 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மகா கும்பமேளா நிகழ்வு ஜனவரி 13ஆம் தேதி பிரயாக்ராஜில் தொடங்கியுள்ளது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறக்கூடிய நிகழ்வு என்பதால் கோடிக்கணக்கான பக்தர்கள் மகா கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜிக்கு வருகை தர உள்ளனர்.
இந்த ஆண்டு சுமார் 45 கோடிக்கும் அதிகமானவர்கள் மகா கும்பமேளாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை பயன்படுத்தி கொண்டு தங்கள் பிராண்டை மக்களிடம் சேர்க்க வேண்டும் என பெரும் நிறுவனங்கள் போட்டியிடுகின்றன.
கௌதம் அதானிக்கு சொந்தமான அதானி குழுமம் இஸ்கான் நிறுவனத்தோடு இணைந்து கும்பமேளா நிகழ்வுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு பிரசாதம் உள்ளிட்டவற்றை வழங்குவதற்கு முன்வந்துள்ளது. மேலும் பக்தர்களுக்கு மந்திரங்கள் அடங்கிய ஆர்த்தி சங்கரா என்ற புத்தகத்தின் 1கோடிக்கும் அதிகமான பிரதிகளை வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications