இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக விளங்கி வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் குழுமத்தின் அடுத்தப் பெரிய வர்த்தகம் ரிலையன்ஸ் ஜியோ-வின் 5ஜி சேவை தான்.
நாட்டின் சில முக்கியமான பகுதிகளில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டு உள்ள நிலையில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இதை விரிவாக்கம் செய்யத் தேவையான கட்டமைப்பை உருவாக்கும் பணியில் இறங்கியுள்ளது ரிலையன்ஸ் ஜியோ.
ஆகாஷ் அம்பானி - முகேஷ் அம்பானி
இதற்காக ஆகாஷ் அம்பானி - முகேஷ் அம்பானி நிர்வாகக் கூட்டணியில் இயங்கும் ரிலையன்ஸ் ஜியோ வெளிநாட்டு வங்கிகளில் பெரும் தொகையைக் கடனாகப் பெற முடிவு செய்துள்ளது. இந்தக் கடன் தான் ரிலையன்ஸ் ஜியோவின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு அடிப்படையாக இருக்கப் போகிறது.
ரிலையன்ஸ் ஜியோ
ரிலையன்ஸ் ஜியோ வெளிநாட்டு வங்கிகளான BNP பரிபாஸ், HSBC மற்றும் MUFG வங்கி ஆகியவற்றிடம் சுமார் 12300 கோடி ரூபாய் அதாவது 1.5 பில்லியன் டாலர் அளவிலான கடனை 5 ஆண்டு ECB திட்டத்தின் வாயிலாகப் பெற திட்டமிட்டு உள்ளது. சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி ECB பிரிவு முதலீட்டு திரட்டல் திட்டத்தின் விதிமுறைகளைத் தளர்த்தியது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கடன்
இதோடு பிற வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து சுமார் 20600 கோடி ரூபாய் அளவிலான கடனை பெற ரிலையன்ஸ் ஜியோ முயற்சி செய்து வருகிறது, இந்தக் கடன் மூலம் 5ஜி சேவைக்குத் தேவையான நெட்வொர்க் கருவிகளை ஸ்வீடன் நாட்டின் எரிக்ஷன் மற்றும் பின்லாந்து நாட்டின் நோக்கியா ஆகிய நிறுவனங்களிடம் வாங்க உள்ளது.
முதலீட்டாளர்கள்
ரிலையன்ஸ் ஜியோ ஏற்கனவே அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்து முதலீட்டை திரட்டிய நிலையில் புதிதாக அடுத்தடுத்து கடன் பெற முடிவு செய்துள்ளது முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது. இன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 0.98 சதவீதம் உயர்ந்து 23.55 ரூபாய் அதிகரித்து 2394.00 ரூபாயாக உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 2022 ஆம் ஆண்டில் 0.43 சதவீதம் மட்டுமே சரிந்து உள்ளது, ஆனால் 2022ல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் அதிகப்படியாக 2856.15 ரூபாய் வரையில் அதிகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications