இந்தியாவில் டேட்டா சேவை அதிகளவில் பயன்படுத்தப்படு வரும் நிலையில், டெலிகாம் நிறுவனங்களின் வர்த்தக முறை அழைப்பு வாயிலான வருமானத்தில் இருந்து இண்டர்நெட் டேட்டா வாயிலான வருமானம் எனப் பெரிய அளவில் மாறி வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் வாடிக்கையாளர்களுக்குப் போதுமான வேகத்திலும், தேவையான அளவிற்கான டேட்டா-வையும் அளிக்க டெலிகாம் நிறுவனங்களுக்கு அதிகளவிலான அலைக்கற்றை தேவை.
4ஜி அலைக்கற்றை ஏலம்
அடுத்த சில வாரத்தில் 4ஜி அலைக்கற்றைக்கான ஏலம் நடைபெற உள்ள நிலையில் நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் ஏலத்தில் பங்குகொள்ளத் திட்டமிட்டு முன்பணம் செலுத்தியுள்ளது.
மார்ச் மாதம் நடக்கும் ஏலத்தில் 700MHz முதல் 2500MHz வரையிலான 7 பேண்டுகளில் சுமார் 2,300 யூனிட் அலைக்கற்றை ஏலத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
டெலிகாம் கட்டுப்பாட்டு ஆணையம்
மார்ச் மாதம் டெலிகாம் கட்டுப்பாட்டு ஆணையமான டிராய் மற்றும் மத்திய டெலிகாம் துறை இணைந்து சுமார் 45,000 முதல் 66,000 கோடி ரூபாய் மதிப்பிலான 4ஜி அலைக்கற்றையை ஏலம் மூலம் டெலிகாம் நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய உள்ளது. இந்த ஏலத்தில் பங்குகொள்ள டெலிகாம் நிறுவனங்கள் அதிகளவிலான தொகையை முன்பணமாகச் செலுத்தியுள்ளது.
டெலிகாம் நிறுவனங்கள்
இந்த ஏலத்தின் மூலம் டெலிகாம் நிறுவனங்கள் தங்களிடம் ஏற்கனவே இருக்கும் பழைய அலைக்கற்றையைப் புதுப்பிக்க வேண்டியது மட்டும் அல்லாமல் தனது வர்த்தக வளர்ச்சிக்கான கூடுதல் அலைக்கற்றையும் பெற வேண்டும் என்பதால் இந்த ஏலத்தில் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜியோ - ஏர்டெல் - வீ
இந்நிலையில் இந்த ஏலத்தில் பங்குகொள்ள வேண்டும் என்பதற்காக முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ சுமார் 9,000 கோடி ரூபாயும், பார்தி ஏர்டெல் 3000 முதல் 3500 கோடி ரூபாயும், வோடாபோன் ஐடியா நிறுவனம் 2500 முதல் 3000 கோடி ரூபாய் அளவிலான தொகையை முன்பணமாகச் செலுத்தியுள்ளது.
பார்தி ஏர்டெல்
இந்த ஏலத்தில் பார்தி ஏர்டெல் குறைந்தது 15,000 முதல் 25,000 கோடி ரூபாய் மதிப்பிலான 4ஜி அலைக்கற்றையைப் பெற இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதேபோல் வோடபோன் ஐடியா குறிப்பிட்ட சில வட்டங்களுக்கு மட்டுமே ஏலத்தில் அலைகற்றைய பெறத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஜியோ மற்றும் ஏர்டெல்
இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் மட்டுமே அனைத்துப் பேண்ட் அலைக்கற்றையும், அனைத்து பகுதி அலைக்கற்றைகளையும் கைப்பற்றும் வகையில் உள்ளது. இதனால் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் மத்தியிலான போட்டி இந்த ஏலத்தில் கடுமையாக இருக்கும்.


Click it and Unblock the Notifications