இந்திய தொலைத்தொடர்பு துறையின் முடிசூடா மன்னனாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ, டேட்டா ட்ராஃபிக் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய மொபைல் ஆப்ரேட்டராக உயர்ந்துள்ளது. ஜியோவின் அதிரடி வளர்ச்சி மூலம் சீன மொபைல் நிறுவனத்திடம் இருந்த உலகின் டேட்டா ட்ராஃபிக் சாம்பியன் என்ற பதவியை ஜியோ கைப்பற்றி பின்னுக்குத் தள்ளியுள்ளது.
ஜியோ தனது காலாண்டு முடிவுகளைத் திங்கட்கிழமை வெளியிட்ட நிலையில், சீனா மொபைல் நிறுவனத்திடம் இருந்து பட்டத்தை ரிலையன்ஸ் ஜியோ கைப்பற்றிய அறிவிப்பு நிறுவனத்தின் வளர்ச்சியைக் குறிக்கும் முக்கிய மைல் கல்லாக அமைந்ததுள்ளது.

மார்ச் 2024 நிலவரப்படி, ஜியோவின் மொத்த வாடிக்கையாளர்கள் அதாவது சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கை 481.8 மில்லியனாக உயர்ந்துள்ளது. இதில், 108 மில்லியன் வாடிக்கையாளர்கள் ஜியோவின் ட்ரூ 5G ஸ்டாண்டலோன் நெட்வொர்க்கில் உள்ளனர்.
ரிலையன்ஸ் ஜியோவுக்கு 5ஜி வாடிக்கையாளர்கள் வாயிலாகவே அதிகப்படியான வருமானம் கிடைப்பதால் இப்பிரிவில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க பல திட்டத்தை தீட்டி செயல்பட்டு வருகிறது.
ஜியோ நெட்வொர்க்கில் உள்ள மொத்த டேட்டா ட்ராஃபிக் 40.9 எக்ஸாபைட் (Exabytes) அளவை மார்ச் காலாண்டில் எட்டியுள்ளது, இது கடந்த ஆண்டை விட 35.2% அதிகமாகும். 5G மற்றும் ஹோம் சேவைகளின் வளர்ச்சியே இந்த அதிகரிப்புக்கு முக்கியக் காரணம். குறிப்பாக, 5G சந்தாதாரர்களிடமிருந்து வரும் டேட்டா ட்ராஃபிக் மொத்த டேட்டா ட்ராஃபிக்கில் 28 சதவீதமாக உள்ளது.
இதோடு மட்டுமல்லாமல், ஜியோவின் ஃபிக்ஸட் வயர்லெஸ் ஆக்ஸஸ் (FWA) சேவைகளும் டேட்டா ட்ராஃபிக்கிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளன.
கோவிட்-19 தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்து, ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் டேட்டா ட்ராஃபிக் பயன்பாடு 2.4 மடங்கு அதிகரித்து வருகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மாதத்திற்கு சராசரி தனிநபர் டேட்டா பயன்பாடு 13.3 GB ஆக இருந்த நிலையில், தற்போது அது 28.7 GB ஆக அதிகரித்துள்ளது. இந்த உயர்வு, இந்தியாவில் டிஜிட்டல் இணைப்புக்கான தேவை எவ்வாறு அதிகரித்து வருகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
நேற்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானி, நிறுவனத்தின் செயல்பாடு மற்றும் இந்தியப் பொருளாதாரத்திற்கு அதன் பங்களிப்பு குறித்து மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார். அதேவேளையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லாபம் 2 சதவீதம் சரிந்துள்ளது ரீடைல் முதலீட்டாளர்கள் மத்தியில் முக்கிய கேள்வியாக இருந்தது
ஆனால் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடைல் பிரிவின் வருவாய், லாபம் சிறப்பாக இருந்தது மூலம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற்றது. இதேபோல் 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேற்பட்ட வரிக்கு முந்தைய லாபத்தை ஈட்டிய முதல் இந்திய நிறுவனம் என்ற சாதனை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications