இந்தியாவில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் மக்கள் மத்தியில் பெரிய அளவிலான ஆர்வத்தை தூண்டியிருந்தாலும், இந்த ஆர்வம் ஸ்டேடியத்தில் எதிரொலிக்காமல் அதிகப்படியான சீட்டுகள் காலியாகவே உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஐபிஎல் போட்டிகளுக்காக அடித்துக்கொண்டு டிக்கெட் வாங்கும் மக்கள் உலக கோப்பை போட்டிக்கான டிக்கெட் வாங்க விருப்பம் இல்லாமல் உள்ளனர்.
இதற்கு மாற்றாக மக்கள் உலக கோப்பை போட்டிகளை டிவிகளிலும், ஸ்மார்ட்போன்களிலும் அதிகளவில் பார்த்து வருகின்றனர். மேட்ச் நடக்கும் நேரத்தில் பொது இடங்களில் பெரும்பாலானோர் போனில் போட்டிகளை அதிகப்படியான ஆர்வத்துடன் கண்டு வருகின்றனர்.

இதன் மூலம் இந்தியாவின் முன்னணி டெலிகாம் சேவை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் செப்டம்பர் காலாண்டை காட்டிலும் டிசம்பர் காலாண்டில் 6 சதவீதம் வரையிலான வளர்ச்சியை எதிர்நோக்கி காத்திருக்கிறது.
அதிகப்படியான மக்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை ஸ்மார்ட்போனில் பார்க்கும் காரணத்தால் டெலிகாம் வாடிக்கையாளர்கள் அதிகப்படியான டேட்டா-வை பயன்படுத்தும் காரணத்தால் இக்காலாண்டில் கூடுதல் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் 5ஜி சேவைக்கான ஆர்வம் மக்கள் மத்தியில் தூண்டும் வகையில் உலக கோப்பை போட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதேவேளையில் 5ஜி போன்களை வாங்குவதற்காக அமேசான், பிளிப்கார்ட் தளத்தில் அதீத தள்ளுபடி உடன் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனால் ஒட்டுமொத்த டிஜிட்டல் மற்றும் டெலிகாம் எகோசிஸ்டமும் உலக கோப்பை போடிகளை மையமாக வைத்து வர்த்தகம் செய்ய துவங்கியுள்ளது. உணவு டெலிவரி சேவை நிறுவனங்கள் கூட உலக கோப்பை போட்டிகளை மையமாக வைத்து வர்த்தகத்தை நகர்த்தி வருகிறது.
இப்படியிருக்கும் வேளையில் 5ஜி சேவையில் அசத்தி வரும் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகியவை 6 சதவீத வருவாய் வளர்ச்சியும், 5ஜி சேவை இல்லாத வோடாபோன் ஐடியா 3- 4 சதவீத வருவாய் வளர்ச்சியும் பதிவு செய்ய உள்ளது. மேலும் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் லைவ் ஸ்ட்ரீமிங் செய்யும் காரணத்தால் மக்கள் அதிகளவில் டேட்டா-வை பயன்படுத்துகின்றனர்.
அக்டோபர் 14 ஆம் தேதி நடந்த இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் போது டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் சுமார் 3.5 கோடி பேர் பார்த்து உலகளவில் பெரும் சாதனை படைக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications