சென்னை: முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் 79 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் தொலைதொடர்பு சேவையை பொறுத்தவரை தனியார் நிறுவனங்கள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. குறிப்பாக முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தான் இந்தியாவின் நம்பர் ஒன் தொலைத்தொடர்பு சேவை நிறுவனமாக இயங்கி வருகிறது. இரண்டாம் இடத்தை ஏர்டெல் நிறுவனம் பிடித்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகிய நிறுவனங்கள் தங்களின் ரீசார்ஜ் கட்டணங்களை கணிசமான அளவு உயர்த்தின.
இதனால் வாடிக்கையாளர்கள் பலரும் இந்த நிறுவனங்களை விட்டு வெளியேறி அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாற தொடங்கியுள்ளனர். இதன் விளைவாக நடப்பு ஆண்டில் கடந்த 30 நாட்களில் மட்டும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 79 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்து இருப்பது தெரியவந்துள்ளது. இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI வெளியிட்டுள்ள தரவுகளின் படி பார்க்கும்போது செப்டம்பர் மாதத்தில் மட்டும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 79 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது, ஏர்டெல் நிறுவனம் 14 லட்சம் வாடிக்கையாளர்களையும், வோடபோன் ஐடியா நிறுவனம் 15 லட்சம் வாடிக்கையாளர்களையும் இழந்துள்ளது.

அதே வேளையில் ஜூலை முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம் 55 லட்சம் வாடிக்கையாளர்களை புதிதாக பெற்றிருக்கிறதாம். அதாவது தனியார் நிறுவனங்களில் சேவை பெற்று வந்த பலரும் தங்களுடைய நம்பரை பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு போர்ட் செய்திருக்கிறார்கள். அதேபோல தொலைதொடர்பு துறை வெளியிட்டுள்ள தகவலின் படி ஜூலை மாதத்தில் மட்டும் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களை சேர்ந்த 15 லட்சம் பேர் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு தங்களுடைய எண்ணை போர்ட் செய்திருக்கிறார்களாம். ஆகஸ்ட் மாதத்தில் இந்த எண்ணிக்கை 21 லட்சம் என உயர்ந்திருக்கிறது.
செப்டம்பர் மாதத்தில் இது 11 லட்சம் என்றும் அக்டோபர் மாதத்தில் 7 லட்சம் என்றும் இருக்கிறது. தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் தங்களுடைய ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்திய பிறகு தான் பெருமளவிலான வாடிக்கையாளர்களை இழந்திருப்பது தெரிய வந்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது தனியார் நிறுவனங்களுக்கு நிகராக சேவைகளை வழங்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது.
இதற்காக நாடு முழுவதும் 4ஜி மற்றும் 5ஜி நெட்வொர்க்கை விரிவாக்கம் செய்து வருகிறது. தனியார் நிறுவனங்களை விட இதில் ரீசார்ஜ் கட்டணங்கள் குறைவாக இருப்பதால் நல்ல நெட்வொர்க் கவரேஜ் கொடுத்தால் இன்னும் பலர் இதனை நோக்கி படையெடுப்பார்கள் என்பதை மறுப்பதற்கு இல்லை.
Written by: Devika


Click it and Unblock the Notifications