இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின், டெலிகாம் பிரிவான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் வெள்ளிக்கிழமை தனது டிசம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது.
இக்காலாண்டில் ரிலையன்ஸ் ஜியோ வருடாந்திர அடிப்படையில் நிகர லாபம் 12.3% வளர்ச்சி அடைந்து 5,208 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் அதன் வர்த்தகச் செயல்பாடுகளின் மூலம் வருவாய் அளவு வருடாந்திர அடிப்படையில் 10.3% அதிகரித்து ரூ.25,368 கோடியாக உள்ளது.

நாட்டின் மிகப்பெரிய டெலிகாம் சேவை நிறுவனமாக இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ அதிகப்படியான வாடிக்கையாளர்கள் உடன் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆனால் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியது மார்ஜின் அளவும், ARPU எனப்படும் வாடிக்கையாளரின் சராசரி வருமானம் தான்.
இதன் படி கூகுள் நிறுவனத்தின் செயல்பாட்டு வரம்பு அதாவது ஆப்ரேட்டிங் மார்ஜின் அளவு கடந்த வருடம் டிசம்பர் காலாண்டில் 26.6% ஆக இருந்த நிலையில் தற்போது 26.3% என்ற கணிசமான சரிவைப் பதிவு செய்துள்ளது. செப்டம்பர் காலாண்டில் ஆப்ரேட்டிங் மார்ஜின் 26.4% ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் காலாண்டிற்கான மொத்த செலவுகள் ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.16,839 கோடியாக இருந்த நிலையில் தற்போது ரூ.18,518 கோடியாக அதிகரித்துள்ளது என Reliance Jio தெரிவித்துள்ளது. செப்டம்பர் காலாண்டில் ரிலையன்ஸ் ஜியோவின் செலவுகள் 18,063 கோடியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் டிசம்பர் காலாண்டில் ரிலையன்ஸ் ஜியோவின் நெட்வொர்க் இயக்கச் செலவுகள் ரூ.7,227 கோடியிலிருந்து ரூ.7,706 கோடியாக அதிகரித்துள்ளது. செப்டம்பர் காலாண்டில் இது ரூ.7,607 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
உரிமக் கட்டணம் / ஸ்பெக்ட்ரம் கட்டணங்களுக்கான செலவு பிரிவில் டிசம்பர் காலாண்டில் ரூ.2,330 கோடியாக உள்ளது. இது செப்டம்பர் காலாண்டில் ரூ.2,290 கோடியாக, கடந்த ஆண்டு டிசம்பர் காலாண்டில் 2120 கோடி ரூபாயாகவும் உள்ளது.
2023 ஆம் நிதியாண்டில் ரிலையன்ஸ் ஜியோவின் லாபம் 12 சதவீதம் அதிகரித்து 15,129 கோடி ரூபாயாக உள்ளது, இதேபோல் வருமானமும் 10 சதவீதம் அதிகரித்து 74,160 கோடி ரூபாயாக உள்ளது. இன்றைய வர்த்தக முடிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 2,734.90 ரூபாய் அளவில் முடிந்துள்ளது.


Click it and Unblock the Notifications