இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் கடந்த 4 மாதங்களில் கிட்டத்தட்ட 1.65 கோடி வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டண உயர்வை அறிவித்தன. அதிலிருந்து தொடர்ந்து வாடிக்கையாளர்கள் அரசுக்குச் சொந்தமான BSNL ஆப்பரேட்டருக்கு மாறத் தொடங்கினர்.
அதன்படி கடந்த அக்டோபரில் ஜியோ நிறுவனம் 37.6 லட்சம், செப்டம்பரில் 79 லட்சம் ஆகஸ்டில் 40 லட்சம், ஜூலை மாதம் 7.58 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இந்தியா தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) தரவுகளின் படி இந்தியாவின் 2-வது மிகப்பெரிய டெலிகாம் ஆப்ரேட்டராக இருப்பது ஏர்டெல். செப்டம்பர் மாதத்தில் ஏர்டெல் நிறுவனம் 14.3 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.

ஏர்டெல் நிறுவனம் ஆகஸ்ட் மாதம் 24 லட்சம் வாடிக்கையாளர்களையும், ஜூலை மாதம் 16 லட்சம் வாடிக்கையாளர்களையும் வோடபோன் ஐடியா அக்டோபர் மாதம் 19 லட்சம் வாடிக்கையாளர்களையும், செப்டம்பர் மாதம் 15.5 லட்சம் வாடிக்கையாளர்களையும் இழந்துள்ளது. இந்த தனியார் டெலிகாம் நிறுவனங்களின் வாடிக்கையாளர் குறைவுக்கு முக்கிய காரணம் நிறுவனங்கள் அமல்படுத்திய ரீசார்ஜ் கட்டண உயர்வுதான்.
இதற்கிடையில் அரசுக்கு சொந்தமான தொலைதொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் தொடர்ந்து வாடிக்கையாளர்களின் ஆதரவை பெற்று வருகிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 5 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் BSNL ஆப்பரேட்டருக்கு மாறி இருக்கின்றனர்.
BSNL நிறுவனம் கடந்த 4 மாதங்களில் சுமார் 68 லட்சம் புதிய வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. அக்டோபர் மாத தரவுகளின் படி ரிலையன்ஸ் ஜியோ 47.48 கோடி வாடிக்கையாளர்களையும், பார்தி ஏர்டெல் 28.7 கோடி வாடிக்கையாளர்களையும், வோடபோன் ஐடியா 12.5 கோடி வாடிக்கையாளர்களையும், BSNL 3.6 கோடி வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளது.
சந்தை பங்கின் அடிப்படையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 39.99 சதவீதத்துடன் முதல் இடத்திலும், அதைத் தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் 33.50 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன. வோடபோன் ஐடியா 18.30 சதவீதத்துடன், BSNL 8.05 சதவீதத்துடன் நான்காவது இடத்திலும் உள்ளது.
தொடர்ந்து BSNL நிறுவனம் வாடிக்கையாளர்களின் ஆதரவைப் பெற்று வருகிறது. இன்னும் பல பகுதிகளில் BSNL சேவை கிடைக்காமல் உள்ளது. இதை சரி செய்யும் பொருட்டு தற்போது நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.


Click it and Unblock the Notifications