கொரோனா வந்த பின், டேட்டா சேவைகள் வியாபாரம் படு ஜோராக கல்லா கட்டத் தொடங்கி இருக்கிறது. பின்ன வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும், வேலைக்கும் போக முடியாது என்றால் என்ன தான் செய்வார்கள்..?
அதான்... பெரும்பாலான மக்கள் யூ டியூப், டிக் டாக், ஃபேஸ்புக், நெட் ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹாட் ஸ்டார் டிஸ்னி என வளைத்து வளைத்து பார்க்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
இந்த சந்தர்ப்பத்தை சில ஆன்லைன் மோசடிக்காரர்கள் தங்களுக்கு தகுதாற் போல பயன்படுத்தி மோசடி செய்யப் பார்க்கிறார்கள். அதைத் தான் பார்க்கப் போகிறோம்.
டேட்டா
இப்போது எல்லாம் நாள் ஒன்று 1 அல்லது 1.5 ஜிபி டேட்டா எல்லா போதவில்லை. குறைந்தபட்சம் 2 - 3 ஜிபி இருந்தால் தான் தாக்குபிடிக்க முடியும் என்பது போல இருக்கிறது நிலைமை. ஆனால் நம் மக்கள் அதிக பணம் கொடுத்து நாள் ஒன்றுக்கு 2 - 3 ஜிபி திட்டங்களை வாங்கவும் அலுத்துக் கொள்கிறார்கள்.
டார்கெட்
பொதுவாகவே யாருக்காக இருந்தாலும், சலுகை விலை, இலவசம், தள்ளுபடி என்றால் ஒரு கவர்ச்சி இருக்கத் தானே செய்யும்..? அந்த கவர்ச்சியைத் தான் ஒரு சில திருடர்கள் மற்றும் ஆன்லைன் மோசடிக்காரர்கள் திட்டமிட்டு பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார்கள். இப்படி ஆசைகாட்டி மக்களை ஏமாற்ற "Good News! Jio and Facebook are giving 25GB Data Daily for 6 months to all Jio users due to lockdown of COVID-19" என ஒரு செய்தி வாட்ஸப்பில் உலவிக் கொண்டு இருக்கிறது. அதோடு ஒரு லிங்கும் கொடுத்து இருக்கிறார்கள்.
திருடர்கள்
அவர்கள் கொடுத்து இருக்கும் லிங்கை க்ளிக் செய்து உள்ளே போனால், ஒரு அப்ளிகேஷனை டவுன் லோட் செய்யச் சொல்கிறது. இந்த அப்ளிகேஷனை எதற்கு டவுன் லோட் செய்யச் சொல்கிறார்கள், என்ன பிரச்சனை என்பதை எல்லாம் தனியாக விளக்கத் தேவை இல்லை. ஏதாவது சைபர் மோசடிகளுக்கு பயன்படுத்தத் தான் நம்மை டவுன் லோட் செய்யச் சொல்கிறார்கள்.
இல்லவே இல்லை
இப்படி உண்மையாகவே ஒரு திட்டத்தை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்து இருக்கிறதா..? என்றால் இல்லை என்றே பல வலை தள செய்திகளும் உறுதிப் படுத்துகின்றன. ஜியோ தரப்பில் இருந்து "அப்படிப்பட்ட சந்தேகத்துக்குரிய லிங்குகளை க்ளிக் செய்ய வேண்டாம்" எனவும் விளக்கி இருக்கிறார்கள்.
ஜாக்கிரதை
மோசடிக்காரர்களும், திருடர்களூம் இலவசம், தள்ளுபடி என்கிற பெயரில் நம்மை ஏமாற்றப் பார்க்கிறார்கள். ஏதோ முயற்சி செய்து பார்ப்போமே என, எதையாவது சம்பந்தம் இல்லாமல் டவுன் லோட் செய்துவிட்டு, பின், நம் முக்கியமான தரவுகள் பறி போய்விட்டது, பணம் போச்சு என அவதிப்பட வேண்டாம். எனவே மக்களே உஷாராக இருங்கள்.


Click it and Unblock the Notifications