மும்பை: முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வதற்காக புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தியாவில் தொலைதொடர்பு சேவை வழங்குவதில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொலை தொடர்பு சேவைக்கு வந்த குறுகிய காலத்திலேயே நம்பர் ஒன் இடத்தை பிடித்துவிட்டது . ஆரம்பத்தில் விலை குறைந்த ரீசார்ஜ் திட்டங்களையும் சலுகைகளையும் அறிவித்து ஜியோ வாடிக்கையாளர்களை ஈர்த்தது.

தற்போது வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அடிப்படையில் பார்க்கும் போது ஜியோ முதலிடத்திலும் ஏர்டெல் இரண்டாமிடதிலும் இருக்கின்றன. தற்போது போட்டி அதிகரித்துள்ள நிலையில் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக ரிலையன்ஸ் ஜியோ பல்வேறு புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக 999 ரூபாய்க்கு 98 நாட்களுக்கான ஒரு ரீசார்ஜ் பிளானை ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கும். 4ஜி வேகத்தில் 2 ஜிபி டேட்டா கிடைக்கும், ஒரு வேளை உங்கள் போனில் 5ஜி டேட்டாவுக்கான வசதி இருந்தால் அன்லிமிடெட் 5ஜி டேட்டா பயன்படுத்தி கொள்ளலாம்.
அதே போல அன்லிமிடெட் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர 999 ரூபாய் திட்டத்தில் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு ஜியோ டிவி, ஜியோ கிளவுட், ஜியோ சினிமா ஆகிய செயலிகளை இலவசமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.
கடந்த ஜூலை மாதத்தில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஆகிய நிறுவனங்கள் தங்களுடைய போஸ்ட்பெய்டு மற்றும் ப்ரீபெய்டு ரீசார்ஜ் கட்டணங்களை கணிசமான அளவு உயர்த்தின. இதனால் அதிருப்தி அடைந்த வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தை நோக்கி நகரத் தொடங்கினர். பிஎஸ்என்எல் நிறுவனம் குறைந்த கட்டணத்தில் இதே அளவிலான வசதிகளை வழங்குகிறது.
அதுமட்டுமின்றி பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி மற்றும் 5ஜி சேவை வழங்கும் பணிகளை தீவிர படுத்தியுள்ளது. இதனால் ஜியோ நிறுவனம் தங்களுடைய வாடிக்கையாளர்களை தக்க வைப்பதற்காக இந்த புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி ஒரு நாளைக்கு ஒரு பயனாளர் பத்து ரூபாய் மட்டுமே போனுக்காக செலவழித்தால் போதும்.
ஆனால் மற்ற ஓடிடி தளங்களுக்கான அணுகல் இந்த திட்டத்தில் கிடைக்காது. எனவே அதிகமான ஓடிடி தளங்களை பார்ப்பவர்கள் 1,049 ரூபாய் மற்றும் 1,299 ரூபாய் திட்டங்களில் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதில் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் , அன்லிமிடெட் காலிங், ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா கிடைக்கும். 1,049 ரூபாய் திட்டத்தில் கூடுதலாக Sony Liv, Zee5 சந்தாவும், 1,299 ரூபாய் திட்டத்தில் Netflix mobile அணுகலும் கிடைக்கும். Story Written by: Devika


Click it and Unblock the Notifications