மும்பை: இந்தியாவின் முன்னணி டெலிகாம் ஆப்ரேட்டராக ரிலையன்ஸ் ஜியோ செயல்பட்டு வருகிறது. இந்த வளர்ச்சிக்கு காரணமாக இருந்தவர்களில் ஒருவரான சஞ்சய் மஸ்ருவாலா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இரண்டு மேலாண் இயக்குனர்களில் ஒருவரான சஞ்சய் மஸ்ருவாலா தன்னுடைய பணியை ராஜினாமா செய்திருப்பது தெரியவந்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மும்பை பங்குச்சந்தையில் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

76 வயதான சஞ்சய் மஸ்ருவாலா திருபாய் அம்பானி காலத்தில் இருந்தே ரிலையன்ஸ் குழுமத்தில் முக்கியமான ஒரு செயல் அதிகாரியாக இருந்து வருகிறார். ரிலையன்ஸ் குழுமத்தின் பல்வேறு தொழில் நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றியவர்.
சஞ்சய் மஸ்ருவாலா வரும் ஜூன் ஒன்பதாம் தேதிக்கு பின் ஜியோ நிறுவனத்திலிருந்து வெளியேறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மற்றொரு மேலாண் இயக்குனரான பங்கஜ் மோகன் பவர் தொடர்ந்து அந்த பொறுப்பை கவனித்துக் கொள்வார் என ஜியோ நிறுவனம் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மேலாண் இயக்குனராக சஞ்சய் மஸ்ருவாலா பொறுப்பேற்றார். அப்போது தொடங்கி நிறுவனத்தின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவர் இவர்.
தற்போது ஜியோ நிறுவனம் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக மாறி இருப்பதற்கு இவரது செயல்பாடுகளும் காரணம். கிட்டத்தட்ட 11 ஆண்டுகாலம் மேலாண் இயக்குனர் பதவியில் இருந்த அவர் தற்போது ராஜினாமா செய்திருக்கிறார்.
நிறுவனத்தின் வளர்ச்சியில் மிக முக்கிய பங்காற்றியவர் சஞ்சய் மஸ்ருவாலா என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.சஞ்சய் மஸ்ருவாலாவின் சேவைக்கு நன்றி தெரிவிப்பதாகவும் ,ரிலையன்ஸ் ஜியோவின் பயணத்தையும் மாற்றி அமைத்தவர் என்றும் நிறுவன தலைமை புகழாரம் சூட்டியுள்ளது.
இதனிடயே ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் 13 % வளர்ச்சி அடைந்துள்ளது. மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் நிகர லாபம் என்பது 5,337 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதுவே கடந்த நிதி ஆண்டில் இதே காலகட்டத்தில் 4,717 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த நிதி ஆண்டு முழுவதும் ஜியோவின் நிகர லாபம் 20,466 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த நிதியாண்டை விட 12% உயர்வாகும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications