மும்பை: அனில் அம்பானிக்கு சொந்தமாக இருந்த ரிலையன்ஸ் நாவல் அண்ட் இன்ஜினியரிங் நிறுவனம் (Reliance Naval & Engineering (RNEL)) இனி ஸ்வான் டிபென்ஸ் அண்ட் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Swan Defence and Heavy Industries Limited) என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
திருபாய் அம்பானியின் இளைய மகனும் முகேஷ் அம்பானியின் சகோதரருமான அனில் அம்பானி ஒரு காலத்தில் இந்திய தொழில்துறையில் கொடிக்கட்டி பறந்தவர். இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராகவும் அவர் இயங்கி வந்தார்.

ஆனால் அவருடைய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்த நிலையில் திவால் நிலைக்கு சென்றுவிட்டார் அனில் அம்பானி. இந்த நிலையில் அனில் அம்பானிக்கு சொந்தமான ஆர்என்ஈஎல் நிறுவனத்தை வாங்கிய ஸ்வான் எனர்ஜி லிமிடெட் நிறுவனம் அந்த நிறுவனத்தின் பெயரைச் மாற்றம் செய்திருப்பதாக அறிவித்துள்ளது.
ஜனவரி 2ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது என பங்குச் சந்தையில் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில் ஸ்வான் எனர்ஜி நிறுவனம் கூறியுள்ளது. ஸ்வான் எனர்ஜி என்பது எண்ணெய் மற்றும் எரிவாயு, ரியல் எஸ்டேட், துணிமணி உள்ளிட்ட துறைகளில் தொழில் புரிந்து வரக்கூடிய குழுமம் ஆகும்.அனில் அம்பானிக்கு சொந்தமான ஆர்என்ஈஎல் நிறுவனம் திவால் அடைந்ததை அடுத்து அது தொடர்பான வழக்கு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் நடைபெற்ற வந்தது.
அப்போது இந்த நிறுவனத்தை வாங்குவதற்கு ஸ்வான் எனர்ஜி முன் வந்தது. இதனை அடுத்து 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஸ்வான் எனர்ஜி லிமிடெட் நிறுவனம் 2100 கோடி கொடுத்து ஆர்என்ஈஎல் நிறுவனத்தை வாங்கியது.
இந்த கையக பணிகள் முழுமை அடைந்ததை அடுத்து தற்போது இந்த நிறுவனத்தின் பெயரை மாற்றி உள்ளது. கடற்படை பாதுகாப்பு மற்றும் எண்ணெய், எரிவாயு கப்பல்கள் துறையில் முன்னணி நிறுவனமாக கொண்டு வரும் நோக்கில் இந்த நிறுவனத்தை பெயர் மாற்றம் செய்து மேம்படுத்த இருப்பதாக ஸ்வான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் கப்பல்கள் கட்டுமானம், கப்பல்கள் சீரமைப்பு உள்ளிட முக்கிய பணிகளிலும் ஈடுபட இருப்பதாக ஸ்வான் எனர்ஜி நிறுவனம் கூறியுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து ஸ்வான் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் பங்கு மதிப்பு வியாழக்கிழமை அன்று 3.6 சதவீதம் உயர்ந்தது.
ஜனவரி 3ஆம் தேதி இன்று நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 751 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது. இந்த நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 23 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். 2024 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் 5100 கோடி ரூபாய் வருமானமும், 586 கோடி ரூபாய் லாபமும் பெற்றுள்ளது.
2023 வரை நஷ்டத்தில் இயங்கி வந்த இந்த நிறுவனம் கடந்த ஆண்டு முதல் லாபத்தில் இயங்கும் நிறுவனமாக மாறி இருக்கிறது. இந்த நிறுவன பங்குகளில் 53 சதவீதம் பிரமோட்டோர்கள் வசமும், வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் வசம் சுமார் 12 சதவீத பங்குகளும் இருக்கின்றன.
Story Written By: Devika


Click it and Unblock the Notifications