இந்தியாவில் இருக்கும் மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்க்கும் வண்ணமும், பசுமை பொருளாதாரத்தை உருவாக்கும் திட்டத்துடன் ரிலையன்ஸ் இண்டஸ்டரீஸ் புதிய வர்த்தகத் துறையில் இறங்க முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் கிரீன் எனர்ஜி வர்த்தகம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ள வேளையில் இத்துறையில் பிற நிறுவனங்களைப் போல் அல்லாமல் ஒட்டுமொத்த எக்கோ சிஸ்டம்-ஐ உருவாக்க சுமார் 60000 கோடி ரூபாய் முதலீட்டில் மாபெரும் திட்டத்தை அறிவித்துள்ளார்.
புதிய எனர்ஜி வர்த்தகம்
2016ல் இந்தியாவில் டெலிகாம் துறையில் இருந்த இடைவேளையை ஜியோ நிறுவனத்தை வைத்து சிறப்பாகத் தீர்த்த நிலையில், தற்போது எனர்ஜி துறையில் இருக்கும் இடைவேளையைப் புதிய எனர்ஜி வர்த்தகத்தின் மூலம் தீர்க்க முடிவு செய்ய உள்ளதாக முகேஷ் அம்பானி இன்று 44வது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வருடாந்திர கூட்டத்தில் அறிவித்தார்.
குஜராத் ஜாம்நகர்
புதிய எனர்ஜி வர்த்தகத்தை வழக்கம் போல் தனது கச்சா எண்ணெய் வர்த்தகம் இருக்கும் குஜராத் ஜாம்நகர் பகுதியிலேயே துவங்க முடிவு செய்துள்ளார் முகேஷ் அம்பானி. ஜாம்நகர் பகுதியில் ஏற்கனவே எனர்ஜி வர்த்தகம் இருக்கும் காரணத்தால் இப்புதிய எனர்ஜி வர்த்தகத்தையும் அங்கேயே துவங்கப்பட்டு உள்ளது.
திருபாய் அம்பானி கிரீன் எனர்ஜி ஜிகா காம்ப்ளக்ஸ்
இப்புதிய வர்த்தகத்திற்காகத் திருபாய் அம்பானி கிரீன் எனர்ஜி ஜிகா காம்ப்ளக்ஸ் தளத்தை உருவாக்க முடிவு செய்துள்ளது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். சுமார் 4 தொழிற்சாலைகள் கொண்ட இத்திட்டத்திற்கு 60,000 கோடி ரூபாய் முதலீட்டில் இப்புதிய எனர்ஜி வர்த்தகத்தைத் துவங்க உள்ளதாக முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.
4 தொழிற்சாலைகள்
1. சோலார் மின்சாரம் உற்பத்தி செய்யும் மாடியூல் தயாரிக்கும் தொழிற்சாலை
2. மின்சாரத்தைச் சேமிக்கும் பேட்டரி தொழிற்சாலை
3. பசுமை ஹைட்ரஜன் வாயு உற்பத்தி செய்யும் Electrolyser factory
4. ஹைட்ரஜன் வாயுவை எரிபொருளாகப் பயன்படுத்தும் Fuel cell தயாரிப்பு தொழிற்சாலை
சோலார் மின்சாரம்
இந்தியாவில் குறைந்த விலையில் சோலார் மின்சாரத்தைத் தயாரிக்கும் சோலார் போட்டோவோல்டாயிக் செல்-ஐ தயாரித்து, 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியா உற்பத்தி செய்யும் 450 ஜிகாவாட் மின்சாரத்தில் ரிலையன்ஸ் 100 ஜிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
பேட்டரி தயாரிப்பு
இதேபோல் மின்சாரச் சேமிப்புப் பிரிவில் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட எலக்ரோ கெமிக்கல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதிநவீன பேட்டரியை தயாரித்து ஆட்டோமொபைல் முதல் அனைத்து துறைகளுக்கும் பேட்டரி விநியோகம் செய்வது தான் இலக்கு.
ஹைட்ரஜன் வாயு உற்பத்தி
பசுமை ஹைட்ரஜன் வாயுவை Electrolyser factory மூலம் தயாரித்து உள்நாட்டில் மட்டும் அல்லாமல் வெளிநாட்டிலும் விற்பனை செய்யத் திட்டமிட்டு உள்ளார் முகேஷ் அம்பானி. தற்போது பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஹைட்ரஜன் வாயுவை எரிபொருளாகப் பயன்படுத்தி இயக்கும் வாகனங்களை அறிமுகம் செய்து வருவது இத்திட்ட அறிமுகத்தின் பின்னணி.
ஹைட்ரஜன் செல்
இந்தியாவில் ஐசி (Internal combustion) கொண்ட வாகனங்களின் பயன்பாட்டை முற்றிலுமாக நீக்கிவிட்டுப் பசுமை வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வண்ணம் ஹைட்ரஜன் பியுயல் செல் உருவாக்குவது தான் இந்த 4 தொழிற்சாலையின் பணி. இதன் மூலம் கார் மட்டும் அல்லாமல் லாரி, பஸ் போன்ற கன ரக வாகனங்களும் இயக்க முடியும்.
அனைத்தும் ஓரே இடத்தில்
அனைத்திற்கும் மேலாக இந்தத் தொழிற்சாலைக்குத் தேவையான அனைத்து மூலப்பொருட்கள், உதிபாகங்கள் என அனைத்தையும் புதிதாக அமைக்கப்பட உள்ள திருபாய் அம்பானி கிரீன் எனர்ஜி ஜிகா காம்ப்ளக்ஸ் தளத்திலேயே தயாரிக்கப்பட உள்ளது.
ரிலையன்ஸ் நியூ எனர்ஜி கவுன்சில்
மேலும் இத்திட்டத்தைச் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்த ரிலையன்ஸ் நியூ எனர்ஜி கவுன்சில் உருவாக்கப்பட்டு உள்ளது. இக்குழுவில் இந்திய அறிஞர்கள் மட்டும் அல்லாமல் உலகநாடுகளிலும் இருக்கும் அறிஞர்களையும் முகேஷ் அம்பானி இந்தக் கவுன்சிலில் சேர்ந்துள்ளார்.
75,0000 கோடி ரூபாய் முதலீடு
மேலும் இத்திட்டத்திற்கான பொருட்களை உருவாக்கவும், கூட்டணி வைக்கவும், எதிர்காலத் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி செய்யவும் கூடுதலாக 15000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைச் செய்ய உள்ளதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். இதன் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் புதிய எனர்ஜி வர்த்தகம் 60000 கோடி + 15000 கோடி என மொத்தம் 75,0000 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாக உள்ளது.


Click it and Unblock the Notifications