உலகிலேயே அதிக மதிப்பு கொண்டதாக இருக்கிறது இந்தியாவின் வீட்டு உபயோக மின்சாதன பொருட்கள் சந்தை. இதனை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என பல நிறுவனங்களும் போட்டி போடுகின்றன. இப்போது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும் இதில் களமிறங்க உள்ளது.
வேர்ல்பூல் நிறுவனம் அமெரிக்காவின் மிச்சிகனை தலைமை இடமாகக் கொண்டு 1911 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 113 ஆண்டுகளாக உலகம் முழுவதும் விரிவடைந்து வீட்டு உபயோக மின்சாதன பொருட்களை விற்பனை செய்கிறது. இந்நிறுவனம், 1987 ஆம் ஆண்டில் முதல்முறையாக இந்திய சந்தையில் கால் பதித்தது. தற்போது குளிர்சாதன பெட்டி, வாஷிங் மெசின், ஏசி, மைக்ரோ வேவ் ஓவன், டிஷ் வாசர் ஆகியவற்றை விற்பனை செய்கிறது.

ஒரு காலத்தில் உலகளவில் வீட்டு உபயோக மின்சாதன பொருட்களை விற்பனை செய்வதில் முதலிடத்தில் இருந்தது வேர்ல்பூல் நிறுவனம். ஆனால் கொரியா, சீனா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த நிறுவனங்களின் வருகையால் படிப்படியாக சந்தையை இழந்தது. இந்நிலையில் தான் இந்தியாவில் தங்கள் நிறுவனத்தை விற்பனை செய்ய முன்வந்துள்ளது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடெய்ல், இந்தியாவின் ஹேவல்ஸ் நிறுவனம் ஆகியவை வேர்ல்பூல் நிறுவனத்தை வாங்க போட்டி போடுகின்றன. வேர்ல்பூல் தங்கள் நிறுவனத்தின் பங்குகளில் 31 சதவீத பங்குகளை இந்தியாவை சேர்ந்த நிறுவனத்திற்கு விற்பனை செய்வதற்கு முடிவு செய்துள்ளது. மீதமுள்ள 20% வைத்திருப்பதற்கு திட்டமிட்டு இருக்கிறது.
தொழிலில் தொடர்ந்து நஷ்டம் அடைந்ததை அடுத்து வேர்ல்பூல் நிறுவனம் வணிகத்தை மறுக்கட்டமைப்பு செய்வது, ஊழியர்கள் எண்ணிக்கை குறைப்பது, குறிப்பிட்ட சில பொருட்களின் தயாரிப்பை நிறுத்திவிட்டு சந்தையில் எதற்கு அதிக டிமாண்ட் இருக்கிறதோ அந்த பொருளை மட்டும் உற்பத்தி செய்வது என தன்னுடைய தொழிலை மாற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தான் இந்தியாவில் பங்குகளை விற்பனை செய்வதற்கு முடிவு செய்து இருக்கிறது. இந்த விற்பனை மூலம் வேர்ல்பூல் 5 ஆயிரம் கோடி ரூபாயை திரட்ட முடியும் என சொல்லப்படுகிறது.
வேர்ல்பூல் நிறுவனத்தின் 31 சதவீத பங்குகளை யார் வாங்குகிறார்களோ அந்த நிறுவனம் மற்ற பங்குதாரர்களிடம் இருந்து 26 சதவீத பங்குகளை வாங்குவதற்கு வழிவகை ஏற்படும். இதன் மூலம் கிட்டத்தட்ட 57% பங்குகள் அந்த புதிய நிறுவனத்திற்கு செல்லும். 57% பங்குகள் செல்கிறது என்றால் இந்திய சந்தையில் வேர்ல்பூல் நிறுவனத்தின் ஒட்டுமொத்த கட்டுப்பாடும் அந்த நிறுவனத்திடம் சென்று விடும். இதனை எப்படியாவது வாங்கி விட வேண்டும் என ரிலையன்ஸ் நிறுவனம் போட்டி இட்டு வருகிறது.
இந்திய பங்குச்சந்தையில் வேர்ல்பூல் நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 1350 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாகிறது. 2024ஆம் ஆண்டில் இந்நிறுவனம் 6,994 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது, இதில் 224 கோடி ரூபாய் லாபம் ஆகும்.


Click it and Unblock the Notifications