ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு லாபம் 36 சதவீதம் அதிகரித்து 2,305 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த நிதியாண்டில் 1,695 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே காலகட்டத்தில் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் வருவாய் 42.8 சதவீதம் வரையில் உயர்ந்து 64,936 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது கடந்த நிதியாண்டில் 45,450 கோடி ரூபாயாக இருந்தது.
இதன் மூலம் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் வருவாய் கொரோனாவுக்கு முந்தைய அளவீட்டை எட்டியுள்ளது, இதனால் கொரோனா பாதிப்பில் இருந்து இந்தியாவின் மிகப்பெரிய ரீடைல் நிறுவனம் முழுமையாக மீண்டு உள்ளது.
ரிலையன்ஸ் ரீடைல்
இக்காலாண்டில் ரிலையன்ஸ் ரீடைல் கடைகளின் அளவு 20 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் மொத்த கடைகளின் எண்ணிக்கை 16,617 கோடி ரூபாயாகவும், ரீடைல் கடைகளின் அளவு 54.5 மில்லியன் சதுரடி ஆகவும் உயர்ந்துள்ளது. ரிலையன்ஸ் ரீடைல் ஆடை மற்றும் FMCG பிரிவில் அதிகப்படியான கவனத்தைச் செலுத்துகிறது.
விற்பனை தளத்தை
இந்தியாவில் எந்தொரு ரீடைல் நிறுவனமும் இதுவரை 50 மில்லியன் சதுரடி விற்பனை தளத்தை வைத்திருக்கவில்லை, இதுமட்டும் அல்லாமல் பல பிரிவுகளில் வர்த்தகத்தைத் தொடர்ந்து விரிவாக்கம் செய்து வரும் ரிலையன்ஸ் ரீடைல் தனது கிடங்கு மற்றும் கடைகளின் எண்ணிக்கையை விரிவாக்கம் செய்வதில் அதிக முதலீடுகளைச் செய்து வருகிறது.
வாட்ஸ்அப் ஜியோமார்ட்
இக்காலாண்டில் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்திற்கு வந்த புதிய வாடிக்கையாளர்களில் சுமார் 37 சதவீதம் வாட்ஸ்அப் ஜியோமார்ட் சேவை மூலம் வந்துள்ளதாக ரிலையன்ஸ் ரீடைல் தெரிவித்துள்ளது. இது இனி வரும் காலத்தில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
டிஜிட்டல் காமர்ஸ்
டிஜிட்டல் காமர்ஸ் தளத்தில் தினசரி ஆர்டர் எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் 53 சதவீதம் அதிகரித்துள்ளது, விற்பனையாளர்கள் எண்ணிக்கை 2 மடங்கு அதிகரித்துள்ளது என ரிலையன்ஸ் ரீடைல் நிறுவன தெரிவித்துள்ளது. ரிலையன்ஸ் பலமே ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வர்த்தகக் காம்போ தான்.
3 புதிய கடைகள்
இக்காலாண்டில் ரிலையன்ஸ் ரீடைல் Azorte, Centro, Fashion Factory என 3 பிரிவில் புதிய மாடல் கடைகளைத் திறந்துள்ளது. இதில் Azorte ப்ரீமியம் பிராண்டுகளின் ஆடைகளை விற்பனை செய்வது, Centro என்பது ஆடைகளுக்கான டிபார்ட்மென்டல் ஸ்டோர் அனைத்து வகையான பிராண்டுகளும் இருக்கும், Fashion Factory என்பது தள்ளுபடி அல்லது value dealகளை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் பிரத்தியேக கடைகள்.


Click it and Unblock the Notifications