முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம், சீன ஃபாஸ்ட் பேஷன் பிராண்டான ஷெயின் நிறுவனத்துடன் கடந்த ஆண்டு மூலதன ஒப்பந்தம் செய்து கொண்டது யாரும் மறந்திருக்க மாட்டார்கள். சீன பிராண்டுகளுக்கும், சீன நிறுவனங்களுக்கும், சீன முதலீடுகளுக்கும் மத்திய அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்த நிலையில் அம்பானி இந்த ஒப்பந்தம் செய்தது பெரும் விவாதமானது.
கடந்த ஒரு வருடமாக இந்த ஒப்பந்தம் எவ்விதமான முன்னேற்றமும் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது புதிய அப்டேட் வந்துள்ளது. பேஷன் வர்த்தகத்தில் இருக்கும் முன்னணி பிராண்டுகளுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

அடுத்த சில வாரங்களில் Shein நிறுவனத்தின் தயாரிப்புகள் ரிலையன்ஸ் ரீடெய்ல் ஆன்லைன் ஷாப்பிங் செயலி மற்றும் விற்பனை கடைகளில் கிடைக்கும் என பல தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
2020ல் இந்திய-சீன எல்லையில் இருநாட்டு ராணுவங்கள் மத்தியில் மோதல்கள் வெடித்த போது சீன செயலிகள் மீது இந்தியா கடுமையான நடவடிக்கை எடுத்தது. ஒரு பகுதியாக ஷெயின் தனது சொந்த செயலி மூலம் இந்தியாவில் தயாரிப்புகளை விற்பனை செய்வது தடை செய்யப்பட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு Shein மீண்டும் அம்பானி உடன் இணைந்து வருகிறது.
Shein நிறுவனத்தின் இந்திய செயல்பாடுகளை முன்னாள் மெட்டா (பேஸ்புக்) இயக்குனர் மனிஷ் சோப்ரா தலைமையில் நடக்க வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், மேற்கத்திய பாஸ்ட் ஃபேஷன் டிரெண்டுகளை விரைவாகக் கண்டறிந்து இந்தியாவிற்கு கொண்டு வருவதற்காக, Shein நிறுவனம் சில ஐரோப்பிய நகரங்களில் ஸ்டுடியோக்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
Shein பிராண்டின் மொத்த இந்திய வர்த்தகமும் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் கீழ் நடக்க உள்ளது. இதேபோல் Shein நிறுவனம் எந்த முதலீடும் செய்யவில்லை, ரிலையன்ஸ் ரீடைல் எந்த பங்குகளையும் அளிக்கவும் இல்லை. இது முற்றிலும் வித்தியாசமான ஒப்பந்தமாகும்.
ஷெயின் நிறுவனத்திற்கு இந்திய வர்த்தகத்தின் லாபத்தில் இருந்து லைசென்ஸ் கட்டண கட்டணம் செலுத்தப்படும், மேலும் ஷெயினுக்கு செய்யப்படும் கட்டணம் அனைத்தும் இந்திய நிறுவனத்தின் லாபத்தில் இருந்து மட்டுமே செய்யப்படும் என்றும் தெரிகிறது.
உலக அளவில் FAST FASHION துறையில் முன்னணியில் இருக்கும் ஷெயின் நிறுவனம், மலிவு விலையில் ஆடை மற்றும் லைப்ஸ்டைல் பொருட்களை விற்பனை செய்கிறது. Shein வருகை இப்பிரிவில் இருக்கும் மிந்த்ரா மற்றும் டாடா குழுமத்தின் ஜூடியோ போன்ற நிறுவனங்களுடன் நேரடி போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications