முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தனது ரீடைல் வர்த்தக கட்டமைப்பைப் பயன்படுத்தி இந்தியாவில் குவிக் காமர்ஸ் வர்த்தக துறையில் இறங்கத் தயாராகி வருகிறது. இதன் மூலம் இத்துறையில் இருக்கும் Blinkit, BigBasket, Instamart மற்றும் Zepto போன்ற நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக ரிலையன்ஸ் விளங்கும் என கூறப்படுகிறது.
ஆனால் உண்மையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தால் Blinkit, Zepto போன்று வளர்ச்சி அடைய வாய்ப்பே இல்லை. ஏற்கனவே ரிலையன்ஸ் மற்றும் கூகுள் முதலீட்டில் இயங்கும் டன்சோ குவிக் காமர்ஸ் வர்த்தகத்தில் தோல்வி அடைந்து திவாலாகும் நிலையில், ரிலையன்ஸ் புதிதாக களமிறங்கத் திட்டமிட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள தகவல் படி ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோமார்ட் குறைந்தது 7-8 நகரங்களில் மளிகைப் பொருட்களை 30 நிமிடங்களில் டெலிவரி செய்யும் சேவையைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. இதன் வெற்றி-யின் அடிப்படையில் படிப்படியாக இந்த சேவையை 1000 க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே ரிலையன்ஸ் ரீடைல், ஜியோமார்ட் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் 90 நிமிடங்களில் மளிகைப் பொருட்களை வழங்கும் சேவையை வழங்கி வந்தது. ஆனால், சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு இந்த சேவை நிறுத்தப்பட்டது.
நவி மும்பையில் தொடங்கப்பட்ட இந்த சேவையை சுமார் 200 நகரங்களுக்கு விரிவுபடுத்த ரிலையன்ஸ் திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த சேவைக்கு போதுமான வரவேற்பு இல்லாத காரணத்தால் இந்த சேவை மூடப்பட்டது.
இந்த நிலையில் தற்போது, ஜியோமார்ட் தனது வாடிக்கையாளர்களுக்கு 30 நிமிடங்களில் பொருட்களை வழங்கும் குவிக் காமர்ஸ் வர்த்தகத்தை வழங்கத் திட்டமிட்டுள்ளது. Blinkit, Swiggy மற்றும் Zepto போன்ற நிறுவனங்கள் தற்போது 10-15 நிமிடங்களில் மளிகைப் பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றன, இதற்கு போட்டியாக ரிலையன்ஸ் களமிறங்க உள்ளது.
இந்தியாவின் குவிக் காமர்ஸ் சந்தையில் சோமேட்டோ முதலீட்டில் இயங்கும் Blinkit நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. வர்த்தக சந்தை பங்கில் சுமார் 40-45 சதவீதத்தை Blinkit நிறுவனம் வைத்துள்ளது.
குறிப்பாக மில்லினியல் மற்றும் ஜென் ஜி தலைமுறையினர் மத்தியில் குவிக் காமர்ஸ் சேவைக்கான பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் இது 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் வாடிக்கையாளர்களை ஈர்க்குமா என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது.
சமீபத்தில் அமெரிக்காவின் ரீடைல் வர்த்தக ஜாம்பவானின் வால்மார்ட் கட்டுப்பாட்டில் இயங்கும் பிளிப்கார்ட் குவிக் காமர்ஸ் துறையில் களமிறங்கத் தயாராகி வருவதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து தற்போது ரிலையன்ஸ் தனது முடிவை அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ்-க்கு ஒரு சாதகமான வாய்ப்பு என்னவென்றால் பிற போட்டியாளர்களைப் போல் 'டார்க் ஸ்டோர்' மாடலை (dark store model) பின்பற்றுவதற்குப் பதிலாக, ரிலையன்ஸ் ரீடைல் கடைகள் நேரடியாகப் பயன்படுத்தி பெரும் வர்த்தகத்தை ஜியோமார்ட் உருவாக்க முடியும்.


Click it and Unblock the Notifications