இன்றைய உலகில் பலருக்கும் சம்பளம் மற்றும் பதவி உயர்வை விட, வீட்டிலிருந்து வேலை செய்வதா அல்லது அலுவலகத்திற்கு செல்வதா என்பதுதான் பெரிய குழப்பமாக இருந்து வருகிறது. சமீபத்தில், ரெட்டிட் தளத்தில் ஒருவர், ஏறக்குறைய ஒரே சம்பளத்தில் வந்த இரண்டு வேலை வாய்ப்புகள் குறித்து தனது குழப்பத்தை பகிர்ந்து கொண்டார்.
ஒரு வேலை, வீட்டிலிருந்து வேலை செய்யும் வசதியை அளித்தது. ஆனால், வேலை கிடைத்ததும் உடனடியாக திட்டம் எதுவும் வழங்கப்படாமல், சிறிது காலம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. மற்றொரு வேலை, திட்டமும் வாடிக்கையாளரும் உறுதியாக இருந்ததால் உடனடி பாதுகாப்பு கிடைத்தது. ஆனால், அதற்காக முதலில் குருகிராமிற்கும், பின்னர் பெங்களூருக்கும் இடம் பெயர வேண்டியிருந்தது. மேலும், முழுநேரமும் அலுவலகத்திற்கு செல்ல வேண்டியிருந்தது.

இவரின் பதிவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் பலவிதமான கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளனர். சிலர், மாதத்திற்கு ரூ.4,000 கூடுதலாக சம்பாதித்தாலும், அது பெங்களூரு போன்ற பெரிய நகரங்களில் பயணச் செலவை கூட ஈடுகட்டாது என்று தெரிவித்தனர். இதுபோன்ற சூழ்நிலையில், வீட்டிலிருந்து வேலை செய்வது மிகவும் புத்திசாலித்தனமானது என்றும் கூறினர்.
அதேபோல் மேலும் சிலர், வீட்டிலிருந்து வேலை செய்வதால் பயண நேரம் மிச்சமாகும். வேலைகளை எளிதாக செய்யலாம் என்று கருத்து தெரிவித்தனர். ஆனால், சிலர் இணைய இணைப்பு பிரச்சனை, வேலை நேரம் எல்லை இல்லாமல் நீண்டுகொண்டே இருப்பது, சக ஊழியர்களுடன் நேரடி தொடர்பு இல்லாததால் தனிமை உணர்வு போன்ற பிரச்சனைகளையும் சுட்டிக்காட்டினர்.
மற்றொருவர், தனது முதல் 8 ஆண்டுகளில் அலுவலகத்தில் வேலை செய்தது, தனது தனிப்பட்ட திறமைகள், நெட்வொர்க் மற்றும் வேலை வாய்ப்புகளை மேம்படுத்த உதவியதாக கூறியுள்ளார். ஒருவேளை குடும்ப பொறுப்புகள் மற்றும் வயதுக்கு ஏற்ற வேலை என்று வரும்போது வீட்டிலிருந்து வேலை செய்வது பொருத்தமாக இருக்கலாம். ஆனால் ஆரம்ப காலங்களில் அலுவலகத்தில் வேலை செய்வது தனிப்பட்ட வளர்ச்சிக்கு அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
பலரும், மாதம் ரூ.4,000 என்பது அவ்வளவு பெரிய தொகையில்லை. எனவே, வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்பை தேர்ந்தெடுத்து, பணத்தையும், நேரத்தையும் சேமிக்கலாம் என ஆலோசனை வழங்கினர். இருப்பினும், அலுவலகத்தில் வேலை செய்வதன் மூலம் புதிய நண்பர்களை உருவாக்கலாம், சக ஊழியர்களுடன் நல்ல உறவை ஏற்படுத்திக் கொள்ளலாம். இது வேலையை எளிதாகவும், மகிழ்ச்சியாகவும் மாற்றும் என்பதையும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.


Click it and Unblock the Notifications