2010ம் ஆண்டில் பிரான்ஸ் வாகன தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட் மற்றும் ஜப்பானின் பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான நிசான் ஆகிய இரண்டு நிறுவனங்களும் கூட்டு சேர்ந்து சென்னை அருகிலுள்ள ஓரகடத்தில் தங்கள் வாகன உற்பத்தி ஆலையான ரெனால்ட் நிசான் ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை தொடங்கின. இந்த ஆலை ஆண்டுக்கு 4 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாகும்.
கடந்த 15 ஆண்டுகளாக இந்த கூட்டு நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது ரெனால்ட் நிசான் ஆட்டோமோட்டிவ் இந்திய பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் உள்ள நிசானின் பங்குகளை வாங்க உள்ளதாக ரெனால்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. தற்சமயம் இந்த கூட்டு நிறுவனத்தில் நிசான் 51 சதவீத பங்குகளை வைத்துள்ளது.

பங்குகளை கைமாற்றுவது தொடர்பாக ரெனால்ட் குழுமமும் நிசானும் பங்கு கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. மேலும், ரெனால்ட் குழுமத்துக்கும் நிசானுக்கும் இடையிலான தற்போதைய திட்டங்களை தொடர்வதற்கும், இந்தியாவில் இரு குழுமத்துக்கும் இடையிலான எதிர்கால உறவை வரையறுப்பதற்கும் ஒரு செயல்பாட்டு ஒப்பந்தமும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.
ரெனால்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிசான் தற்போது வைத்திருக்கும் 51 சதவீத பங்குகளை வாங்குவதன் மூலம், ரெனால்ட் குழுமம் ரெனால்ட் நிசான் ஆட்டோமோட்டிவ் இந்திய பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை சொந்தமாக்கும் என்று தெரிவித்துள்ளது. அதேசமயம், இந்த பரிவர்த்தனை தொடர்பான மதிப்பை அந்நிறுவனம் தெரிவிக்கவில்லை.
இந்த பரிவர்த்தனை ஒழுங்குமுறை ஒப்புதலுக்கு உட்பட்டது. இந்த ஆண்டு மே மாதத்துக்குள் இந்த ஒப்பந்தம் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ரெனால்ட் குழுமத்தின் 2027 இன்டர்நேஷனல் கேம் திட்டத்தின்கீழ், இந்தியாவில் ரெனால்ட் நிறுவனம் தனது இருப்பை வலுப்படுத்த உதவும்.
2026ம் ஆண்டில் நான்கு மாடல்களுடன் தொடங்கி, சென்னை ஆலையில் சிஎம்எஃப்-பி தளத்தை அறிமுகப்படுத்த ரெனால்ட் திட்டமிட்டுள்ளது. ரெனால்ட் நிசான் ஆட்டோமோட்டிவ் இந்திய பிரைவேட் லிமிடெட் நிறுவனம் முழுமையாக ரெனால்ட் நிறுவனத்துக்கு சொந்தமானாலும், புதிய நிசான் மேக்னைட் உள்பட நிசான் மாடல்களை இந்த ஆலை தொடர்ந்து உற்பத்தி செய்யும்.
மேலும் வரும் ஆண்டுகளில் இந்தியாவிற்கான வாகனங்களை தயாரிப்பதற்கும், ஏற்றுமதி செய்வதற்கும் இந்த ஆலையை நிசான் பயன்படுத்தும் என தகவல். இதற்கிடையில், ரெனால்ட் குழுமம் மற்றும் நிசான் ஆகியவை இணைந்து தொடர்ந்து செயல்படும். ரெனால்ட் நிசான் தொழில்நுட்பம் மற்றும் வணிக மையம் இந்தியா நிறுவனத்தில் நிசான் அதன் 49 சதவீத பங்குகளை தொடந்து தக்கவைத்துக் கொள்ளும், ரெனால்ட் குழுமம் அதன் 51 பங்குகளை வைத்திருக்கும் என தகவல்.


Click it and Unblock the Notifications