வீட்டு வாடகையில் இருந்து டிடிஎஸ் பிடித்தம் செய்வது தொடர்பாக வருமான வரித்துறை புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நில உரிமையாளருக்கு வாடகை செலுத்துவதற்கு முன்பு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்பட வேண்டும். இது வாடகை வருமானத்தை கண்காணிக்க வருமான வரித்துறைக்கு உதவும். ஒரு மாதத்திற்கான வீட்டு வாடகை ரூ. 50,000-த்திற்கும் அதிகமாக இருந்தால் மட்டுமே டிடிஎஸ் கழிக்கப்பட வேண்டும். வாடகை செலுத்துவதில் டிடிஎஸ் குறித்து வருமானவரித்துறை விதிகள் என்ன சொல்கிறது? என்பதை பற்றி இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.
பிரிவு 194-IB: வருமான வரித் துறையின் அறிக்கையின்படி, வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 194-IB கீழ் யார் வரி செலுத்த வேண்டும் என்று பார்ப்போம்.

யார் வரி செலுத்த வேண்டும்?: தனிநபர் வாடகை செலுத்தும் போது இந்த விதி பொருந்தும். உதாரணமாக, ஒருவர், ஒரு வீட்டில் குடியிருந்து வாடகை செலுத்தினால், இந்த விதிமுறைகளுக்கு உட்படுவார். இந்து கூட்டுக் குடும்பம் வாடகை செலுத்தும்போது இந்த விதி பொருந்தும். இந்து கூட்டுக் குடும்பம் என்பது மூதாதையரைக் கொண்ட மற்றும் சட்டப்படி கூட்டாக வாழும் குடும்பமாகும். அவர்களின் சொத்துக்களும் கூட்டாக நிர்வகிக்கப்படும்.
வரி விகிதம்: 2024-ஆம் ஆண்டின், அக்டோபர் 1-ஆம் தேதி முதல், வாடகை செலுத்தும் போது 2 சதவீதம் வரி பிடித்தம் செய்யப்பட வேண்டும். அதாவது, நீங்கள் நில உரிமையாளருக்குச் செலுத்தும் வாடகைத் தொகையில் 2 சதவீதத்தை பிடித்தம் செய்து அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டும்.
உதாரணமாக பிரியா என்ற பெண் ஒரு வாடகை வீட்டில் குடியிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். வாடகை செலவு ரூ. 60,000 என்றால்.. பிடித்தம் செய்ய வேண்டிய டிடிஎஸ் விகிதம் 2%. 60,000-த்தில் இரண்டு சதவீதம் என்பது 1200 ரூபாய். நில உரிமையாளருக்கு வாடகையை வழங்குவதற்கு முன்பு இந்த தொகையை கழித்துக் கொண்டு மீதமுள்ள 58,800 ரூபாயை வழங்க வேண்டும். அதோடு படித்தம் செய்த 1200 ரூபாயை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும்.
தேவைகள்: பொதுவாக வரிப் பிடித்தம் செய்யும்போது TAN பெற வேண்டும். ஆனால் 194ஐபி இன் கீழ் வாடகைக்கு டிடிஎஸ் பிடிக்கும் தனிநபர்கள் அல்லது இந்து கூட்டு குடும்பங்கள் TAN பெற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. வருமான வரித்துறைக்கு தெரிவிக்கும்போது பான் நம்பரை குறிப்பிடுவது முக்கியம். பான் நம்பர் இல்லை என்றாலும் அதற்கு மாறாக ஆதார் நம்பரைப் பயன்படுத்தலாம்.
அதேபோல நீங்கள் பிடித்தம் செய்த தொகையை அந்த மாதம் முடிவடைந்ததில் இருந்து 30 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். உதாரணமாக ஏப்ரல் மாதத்திற்கு நீங்கள் வாடகை செலுத்தி விட்டீர்கள் அப்போது டிடிஎஸ் பிடித்தம் செய்திருக்கிறீர்கள் என்றால்.. அந்த தொகையை மே மாதம் 30-ஆம் தேதிக்குள் அரசுக்கு செலுத்த வேண்டும். நீங்கள் செலுத்தும் போது படிவம் 26QC-ஐ நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். இந்த படிவம் குறிப்பாக வாடகை செலுத்துபவர், வாடகை தொகை மற்றும் பிடித்தம் செய்யப்பட்ட டிடிஎஸ் விவரங்கள் போன்ற அனைத்து விபரங்களையும் கொண்டிருக்கும்.
வரி செலுத்தவில்லை என்றால் என்ன நடக்கும்?: பிரிவு 194IB-இன் கீழ் வாடகை செலுத்தும் அனைவரும் டிடிஎஸ் கழிக்க வேண்டும். அப்படி செய்யத் தவறினால் வரி செலுத்த தவறியவராக வருமான வரி துறையால் கருதப்படுவீர்கள். இது ஒரு விதிமீறல். இதைச் செய்தால் அதற்கு நீங்கள் செலுத்த தவறிய வரி தொகைக்கு ஈடாக வட்டியும் செலுத்த வேண்டி இருக்கும். எனவே ஐம்பதாயிரத்திற்கும் மேல் வாடகை செலுத்துபவர்கள் உரிய ஆவணத்தைக் கொண்டு வரி செலுத்தி வந்தால் எந்த பிரச்சினையும் இருக்காது.


Click it and Unblock the Notifications