உக்ரைன் - ரஷ்யா இடையேயான பிரச்சனைக்கு மத்தியில் பணவீக்கம் என்பது மிக மோசமான பிரச்சனையாக மாறி வருகின்றது. இந்த நிலையில் அமெரிக்காவின் மத்திய வங்கியானது 50 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது. இதே இந்திய ரிசர்வ் வங்கியானது திடீரென நேற்று 40 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தினை உயர்த்தியது.
இதனால் கடன்களுக்கான வட்டி விகிதமானது அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
75 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாம்
இதற்கிடையில் ரிசர்வ் வங்கியின் இந்த வட்டி அதிகரிப்பு ஆரம்பம் தான். மார்ச் 2023 இறுதிக்குள் ரெப்பொ விகிதம் 5.15% ஆக இருக்கலாம் என்றும் நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். இதன் மூலம் அடுத்த 10 மாதங்களில் ரெப்போ விகிதம் 75 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
டெபாசிட் செய்பவர்களுக்கு நல்ல விஷயம்
இதனால் அடுத்த ஆண்டில் வங்கி டெபாசிட்களுக்கான விகிதம் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வங்கிகளில் டெபாசிட் செய்பவர்களுக்கும், செய்யவிருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் மிக நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. எனினும் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்க இது வழிவகுக்கலாம். இது கடன்களுக்கு செலுத்தப்படும் மாத தவணைத் தொகையிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
ரெப்போ அதிகரிப்பால் தாக்கம் இருக்கலாம்
சமீபத்திய எஸ்பிஐ ஆய்வறிக்கையின் படி, டிசம்பர் 2021 நிலவரப்படி, 39.2% கடன்கள் வெளிப்புற அளவுகோல்களுடன் இணைக்கப்பட்டுள்ளன என்றும், ரெப்போ விகித அதிகரிப்பானது வாடிக்கையாளர்களின் வட்டி செலவினங்களை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது அடுத்த காலாண்டில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது.
பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வரலாம்
பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையினை எடுத்திருந்தாலும், உணவு பொருட்கள் மற்றும் பெட்ரோல், டீசல் மீதான விலையேற்றம் பணவீக்கத்தின் முக்கிய காரணிகளாக உள்ளன. சப்ளை சங்கிலியில் நிலவி வரும் பிரச்சனைக்கு மத்தியில் இந்த விலையேற்றம் உள்ளது. இதனை சரிசெய்ய பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி குறைப்பு செய்யலாம் என பரிந்துரை செய்யப்படுகிறது. இது பணவீக்கத்தினை கட்டுக்குள் வைக்க உதவும்.


Click it and Unblock the Notifications