கலிபோர்னியா: டெஸ்லா (Tesla) மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2014 ஆம் ஆண்டில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் பயிற்சி பணியாளரிடம் மஸ்க் பாலியல் உறவு வைத்துக் கொண்டதாகவும், பின்னர் அவரை குழந்தை பெற்றுக் கொள்ளுமாறு அழுத்தம் கொடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எலான் மஸ்க் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மஸ்க் தனது நிறுவனத்தில் பணிபுரியும் 2 பெண் ஊழியர்களுடன், அவர் பாலியல் உறவு வைத்துக் கொண்டதாகவும், மற்றொரு ஊழியரிடம் குழந்தை பெற்றுக் கொள்ளுமாறு துன்புறுத்தியதாகவும் அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்ட அறிக்கையில், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் சங்கடமாக உணர வேண்டிய சூழலை எலான் மஸ்க் உருவாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது எலான் மஸ்க் மீதான சமீபத்திய குற்றச்சாட்டுகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக, LSD, கோகைன், எக்ஸ்டசி போன்ற போதை தரும் மருந்துகளை அவர் தவறாகப் பயன்படுத்தியதாகவும், சில சமயங்களில் நிறுவன போர்டு மெம்பெர்களுடனும் சேர்ந்து அலுவலகத்திலேயே இது போன்ற மருந்துகளை பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் எலான் மஸ்க் மேல் இருந்தன.
முன்னதாக, விரோதமான பணிச்சூழலை வளர்ப்பதாக எலான் மஸ்க் குற்றம் சாட்டப்பட்டார். மேலும் பெண்களுக்கு ஆண்களை விட குறைவாக சம்பளம் வழங்கியதாகவும், புகார் செய்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்ட அறிக்கையில், டெஸ்லா நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் ஊழியர்களிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், ஸ்பேஸ்எக்ஸ் விமானப் பணிப்பெண் ஒருவர், 2016 ஆம் ஆண்டில் மஸ்க் தன்னிடம் தனது உடலைக் காட்டியதாகவும், பாலியல் உறவுக்கு பதிலாக தனக்கு ஒரு குதிரையை வாங்கிக் கொடுப்பதாகக் கூறியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
2013 ஆம் ஆண்டில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் இருந்து விலகிய மற்றொரு பெண் ஊழியர், எலான் மஸ்க் தன்னிடம் பல முறை குழந்தை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். 11 குழந்தைகளைப் பெற்றிருக்கும் எலான் மஸ்க் , உலகில் மக்கள் தொகை குறைவது பெரும் பிரச்சினை என்றும், அதிக IQ உள்ளவர்கள் அதிக குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் மஸ்க்-இன் வழக்கறிஞர்கள் வெளியான அறிக்கையை மறுத்துள்ளனர். வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி அறிக்கையில் பொய்யான தகவல்கள், தவறான சித்தரிப்புகள் மற்றும் உண்மைக்கு மாறான விஷயங்கள் இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், எங்களுக்கு எதிராக செயல்படும் சக்திகளுக்கு மத்தியிலும், நாங்கள் சாதித்து வரும் சாதனைகளைக் கண்டு நான் தொடர்ந்து வியப்படைகிறேன். எலான் மஸ்க் நான் அறிந்த மிகச் சிறந்த மனிதர்களில் ஒருவர் என்று SpaceX இன் தலைவரும் தலைமை இயக்க அதிகாரியுமான Gwynne Shotwell கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications