பிரதமர் மோடி தலைமையிலான NDA கூட்டணி 3வது முறையாக ஆட்சியைப் பிடித்து பதவியேற்று 3வது நாளில் நாட்டின் பணவீக்கம் குறித்து முக்கியமான தரவுகளை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. இந்திய மக்கள் விலைவாசி உயர்வால் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் வேளையில் நாட்டின் சில்லறை விலை பணவீக்கம் 12 மாத சரிவை எட்டி மோடி அரசுக்கு புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.
இந்தியாவின் சில்லறை விலை பணவீக்க விகிதம் மே மாதத்தில் 12 மாதங்களில் மிகக் குறைந்த அளவாக 4.75 சதவீதமாகப் பதிவாகியுள்ளது என மத்திய அரசு இன்று தனது அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டு உள்ளது. ஏப்ரல் மாதத்தில் 11 மாதங்களில் மிகக் குறைவாக 4.83 சதவீதமாக இருந்த பணவீக்கம் மே மாதத்தில் சற்று கூடுதலாகக் குறைந்துள்ளது.

சில்லறை விலை பணவீக்க விகிதம் இந்திய ரிசர்வ் வங்கியின் இலக்கான 2 முதல் 6 சதவீதம் வரையிலான பணவீக்க வரம்புக்குள் தொடர்ந்து இருந்து வருகிறது. இதேவேளையில் மாதாந்திர அளவில் கணக்கிடும்போது (Sequentially), மே மாத பணவீக்க விகிதம் ஏப்ரல் மாதத்தைப் போலவே 0.48 சதவீதமாக மாற்றமின்றி உள்ளது.
உணவுப் பொருட்களின் பணவீக்க விகிதம் ஏப்ரல் மாதத்தின் 8.75 சதவீதத்திலிருந்து மே மாதத்தில் 8.62 சதவீதமாகச் சிறிது குறைந்துள்ளது. இருப்பினும், 2023 ஆம் ஆண்டு மே மாதத்தில் பதிவான 3.3 சதவீதத்தை விட இது மிகவும் அதிகமாகவே உள்ளது.
கிராமப்புற பணவீக்கம் ஏப்ரல் மாதத்தின் 5.43 சதவீதத்திலிருந்து மே மாதத்தில் 5.28 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதே நேரம், நகர்ப்புற பணவீக்க விகிதம் மே மாதத்தில் மாற்றமின்றி 4.15 சதவீதமாக இருக்கிறது.
இந்தியாவின் அத்தியாவசியப் பொருட்களின் பணவீக்க விகிதத்தைப் பார்க்கும் போது, காய்கறிகளின் பணவீக்க விகிதம் ஏப்ரல் மாதத்தின் 27.8 சதவீதத்திலிருந்து மே மாதத்தில் 27.3 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இந்தியாவின் அத்தியாவசிய உணவுப் பொருட்களில் குறிப்பிடத்தக்கப் பங்கு வகிக்கும் தானியங்கள் மற்றும் பயிர் வகைகளின் பணவீக்க விகிதம் முறையே 8.69 சதவீதம் மற்றும் 17.14 சதவீதமாக உள்ளது.
எரிபொருள் மற்றும் மின்சார பணவீக்க விகிதம் ஏப்ரல் மாதத்தின் 4.24 சதவீத சரிவிலிருந்து மே மாதத்தில் 3.83 சதவீத சரிவாகக் குறைந்துள்ளது. இதேபோல் ஆடை பணவீக்க விகிதங்கள் முறையே 2.74 சதவீதம் மற்றும் காலணி துறைகளுக்கான பணவீக்க விகிதங்கள் 2.56 சதவீதமாக இருந்தன.
மொத்தத்தில், உணவுப் பொருட்களைத் தவிர மற்ற அத்தியாவசியப் பொருட்களின் பணவீக்க விகிதம் கூடுதலாகக் குறைந்துள்ளது என்பது மகிழ்ச்சியளிக்கும் செய்தி. இது பொதுமக்களின் விலைவாசி சுமையைக் குறைக்கும்.
பணவீக்கம் குறைந்ததால் வட்டி விகிதம் விரைவில் குறைக்கப்படுவது தான் மக்களின் முக்கியமான எதிர்பார்ப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications