சென்னை: இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் ரீடைல் பணவீக்கம் 3.54 சதவீதமாகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் விலைவாசி உயர்வு அதிகமாக இருந்ததால், இந்த ஆண்டு குறைந்துள்ளது. இது இந்திய ரிசர்வ் வங்கியின் குறைந்தபட்ச இலக்கான 4 சதவீதத்திற்கும் குறைவாகப் பதிவாகியுள்ள முக்கியமான தருணமாகும்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக ரீடைல் பணவீக்கம் 4 சதவீதத்திற்கும் குறைவாக 3.54 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. இதன் மூலம் அடுத்த நாணய கொள்கை கூட்டத்தில் ஆர்பிஐ தனது பென்ச்மார்க் வட்டி விகிதமான ரெப்போ விகிதத்தைக் குறைக்க வாய்ப்பு அதிகமாகியுள்ளது.

ஜூன் மாதத்தில் ரீடைல் பணவீக்கம் 5.08 சதவீதமாக இருந்தது, அதன் பின்னர் ஜூலை மாதத்தில் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ரீடைல் பணவீக்கம் 7.44 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் சில்லறை விலை பணவீக்க விகிதம் மே மாதத்தில் 12 மாதங்களில் மிகக் குறைந்த அளவாக 4.75 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. இதன் மூலம் அப்போது 12 மாத சரிவை எட்டியதைத் தொடர்ந்து தற்போது 4 சதவீதத்திற்குக் கீழ் குறைந்து 5 வருட சரிவை எட்டியுள்ளது.
ரீடைல் பணவீக்கம் குறைவது மூலம் நாட்டின் வர்த்தகம் அதிகரித்து பொருளாதாரம் உயர வழிவகுக்கும். இருப்பினும், உணவுப் பொருட்களின் விலை உயர்வு தொடர்பான பிரச்சனை தொடர்ந்து உள்ளது.
இந்த மாதம் நடந்த ஆர்பிஐ-யின் 2 நாள் நாணய கொள்கை கூட்டத்தில் நாட்டின் பணவீக்கம் குறைப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்தும் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது. அதிக உணவுப் பொருள் விலை ஜூலை மாதத்திலும் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தாஸ் தெரிவித்தார். ஜூன் மாதத்தில் பணவீக்கம் 5.1 சதவிகிதமாக இருந்தது. இது ஐந்து மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக அதிகரித்தது.
ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை குழு (MPC) 2024-25 நிதியாண்டிற்கான பணவீக்க கணிப்பை 4.5 சதவிகிதமாகவே தொடர்ந்துள்ளது. அதேசமயம், 2025-26 நிதியாண்டிற்கான பணவீக்கம் 4.4 சதவிகிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2024-25 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டிற்கான பணவீக்க கணிப்பு 3.8 சதவீதத்தில் இருந்து 4.4 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மூன்றாம் காலாண்டிற்கான கணிப்பு 4.6 சதவீதத்தில் இருந்து 4.7 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. நான்காம் காலாண்டிற்கான கணிப்பு 4.5 சதவீதத்தில் இருந்து 4.3 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications