இந்தியாவின் சில்லறை பணவீக்கம் ஜூன் மாதத்தில் பலரும் நினைத்தப்படி உயர்ந்தாலும், ஆர்பிஐ லிமிட்-க்குள் இருக்கும் காரணத்தால் ரெப்போ விகிதம் உயர்த்தும் அச்சம் குறைந்துள்ளது. ஆனால் அமெரிக்க மத்திய வங்கி ஜூலை மாத இறுதியில் நடத்த இருக்கும் கூட்டத்தில் 0.25 சதவீதம் வட்டியை உயர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்தியாவில் ஜூன் மாத ரீடைல் பணவீக்கம் 4.81 சதவீதமாக உயர்ந்துள்ளது, மே மாதம் 25 மாதங்களில் இல்லாத அளவுக்கு 4.25 சதவீதமாக குறைந்த ரீடைல் பணவீக்கம் தற்போது தக்காளி மற்றும் பிற முக்கிய காய்கறிகள், உணவு பொருட்களின் விலை உயர்வால் 4.81 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.

ஜூன் மாத ரீடைல் பணவீக்க அளவுகளை புதன்கிழமை புள்ளிவிவர அமைச்சகம் வெளியிட்டது நுகர்வோர் விலைக் குறியீடு (சிபிஐ) அடிப்படையிலான பணவீக்கம் தொடர்ந்து நான்காவது மாதமாக இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) சகிப்புத்தன்மை அளவான 2 முதல் 6 சதவீதத்திற்குள் உள்ளது.
நுகர்வோர் உணவு விலைக் குறியீடு (சிஎஃப்பிஐ) அதாவது உணவு பணவீக்கத்தின் அளவு மே மாதத்தில் 2.91 சதவீதத்திலிருந்த நிலையில் ஜூன் மாதத்தில் 4.49 சதவீதமாக உள்ளது. மேலும் ஜூன் மாதத்தில் கிராமப்புற பணவீக்கம் 4.72 சதவீதமாகவும், நகர்ப்புற பணவீக்கம் 4.96 சதவீதமாகவும் உள்ளது.
கடந்த சில வாரங்களாக காய்கறிகள், குறிப்பாக தக்காளியின் விலைகள் எதிர்பார்த்ததை விடவும் பெரிய அளவில் உயர்ந்துள்ளது.அரசின் தகவல் படி இந்தியாவில் தக்காளி விலை கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 326.13% சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் முழுமையான தாக்கம் ஜூலை மாதத்தில் தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள தரவுகள் படி மே மாத தொழிற்துறை உற்பத்தி 5.2 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது, கடந்த வருடம் இதே காலக்கட்டத்தில் 19.7 சதவீதம் வரையில் உயர்ந்திருந்தது. உற்பத்தி துறை 5.7 சதவீதம் மே மாதத்தில் வளர்ச்சி அடைந்திருந்தது.


Click it and Unblock the Notifications