உழைத்து முடித்து ஓய்வு பெற்ற பிறகு வீட்டில் இருந்து ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று சிலர் எண்ணிக் கொண்டிருக்கையில்.. ஓய்வுக்குப் பிறகும் கஷ்டப்பட்டு உழைத்துக் கொண்டிருக்கிறார் கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர். விலங்கியல் ஆசிரியராக பணியாற்றிய இவர் தனது வாழ்நாளில் 36 ஆண்டுகளை குழந்தைகளின் கல்விக்காக அர்ப்பணித்து பின்னர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி 2022-ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றுள்ளார் ரேமாபாய். ஆனால் ஓய்வு பெற்ற பிறகும் மாதம் ரூ.1 லட்சம் வரை வருமானம் ஈட்டி வருகிறார். அவர் அப்படி என்ன வேலையை செய்கிறார். எப்படி இவ்வளவு லாபம் கிடைக்கிறது? என்ற விபரங்கள் குறித்து பார்ப்போம்.
ரேமாபாய் ஓய்வு பெற்ற பிறகு டிராகன் பல விவசாயத்தில் இறங்கியுள்ளார். இது அவருக்கு அற்புதமான பயணமாக அமைந்தது. டிராகன் பழங்கள் பொதுவாக விளைவிக்கும் மண் பருவ கால சூழல் ஆகியவற்றை பொறுத்து வளரும். இது எல்லா மண்ணிலும் வளர்ந்து விடும் என்று கூறி விட முடியாது. ஆனால் டிராகன் பல விவசாயத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணிய ரேமாபாய் ஓய்வுக்குப் பிறகு இதை சவாலாக எடுத்து செய்யத் தொடங்கியுள்ளார். அப்போது அவருடைய தாயாரின் மறைவு காரணமாக தன்னுடைய சோகத்தை வேறு பக்கம் திசை திருப்ப வேண்டி வித்தியாசமான பழ வகைகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டி இருக்கிறார் ரேமாபாய்.

ரேமாபாயின் கணவர் வேலைக்கு சென்று விடுவார். அவருடைய மகன்கள் டெல்லியில் வசித்ததால் வீட்டில் யாரும் இல்லாமல் இருந்த ரேமாபாய் பொழுதுபோக்குக்காக தனது மொட்டை மாடியை தாவரங்கள் மற்றும் பழங்களை வளர்ப்பதற்கு பயன்படுத்தியுள்ளார்.
ஒரு நாள் ரேமாபாயின் மகன் டிராகன் பழங்களின் எண்ணற்ற நன்மைகளான கொழுப்பைக் குறைக்கும் திறன் மற்றும் பார்வையை மேம்படுத்தும் திறன் ஆகியவற்றைப் பற்றி கூறியுள்ளார். அதை கேட்டு தானும் டிராகன் பழங்களை தனது மொட்டை மாடியில் வளர்க்க வேண்டும் என்று எண்ணி அதற்கான வேலையை செய்துள்ளார்.

தற்போது ரேமாபாயின் மொட்டை மாடியில் ஒவ்வொரு மாதமும் சுமார் 500 கிலோ டிராகன் பழங்கள் அறுவடை செய்யப்படுகின்றன. ஒரு கிலோ டிராகன் பழம் ரூ.200 என்ற விலையில் விற்பனை செய்யப்படுவதால் ஓய்வுக்குப் பிறகு தற்போது மாதம் 1 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்து வருகிறார்.
வளமான மண், வளர்ப்பதற்கான இடங்கள் இருந்தும் இன்னும் நம் நாட்டில் பலர் டிராகன் பல விவசாயத்தில் தோல்வி அடைந்து வருகின்றனர். ஆனால் மண்ணே இல்லாமல் டிராகன் பழங்களை வளர வைக்க முடியும் என்று கூறுகிறார் ரேமாபாய். தனது மொட்டை மாடியில் மண்ணற்ற முறையைப் பயன்படுத்தி டிராகன் பழங்களை விளைவிக்கிறார்.
இது குறித்து கூறுகையில் "மொட்டை மாடியில் டிராகன் பழங்களை வளர்ப்பதற்கு நிறைய மண் தேவைப்பட்டது. என்னால் சொந்தமாக அவற்றை மொட்டை மாடிக்கு எடுத்துச் செல்ல முடியவில்லை. எனவே மண்ணில்லா முறையைப் பின்பற்ற முடிவு செய்தேன் என்று கூறுகிறார் இந்த சாதனைப் பெண். தற்போது இவர் 50 பெரிய பிளாஸ்டிக் பேரல்களில் மஞ்சள் மற்றும் சிவப்பு நிற டிராகன் பழங்கள் உட்பட 100 அயல்நாட்டு செடிகளை வளர்த்து வருகிறார்.

மண்ணில்லாமல் செடி வளர்ப்பது எப்படி சாத்தியம் என்று நீங்கள் கேட்பது கேட்கிறது இதற்கான நுட்பத்தை பற்றி கூறுகையில்.. "ஒரு பிளாஸ்டிக் கேனில் கீழே வடிகால் வசதிக்கு ஒரு சிறிய துளை போட்டு, அதில் ஒரு தடிமனான அடுக்கு பச்சை இலைகள், பின்னர் ஒரு அடுக்கு மரத்தூள், அதற்குப் பிறகு ஒரு அடுக்கு அரிசி உமி, மற்றும் ஒரு தடிமனான அடுக்கு கம்போஸ்ட்டை (சுமார் 3 கிலோ) போடவும். கடைசி அடுக்காக 100 கிராம் எலும்பு தூள் சேர்க்கவும். அதன் பிறகு உங்கள் நாற்றுகளை நடவும். நான் ஒவ்வொரு கேனிலும் இரண்டு நாற்றுகளை நடவு செய்தேன்" என்று கூறுகிறார் ரேமாபாய்.
இந்தக் கலவையிலேயே வேர் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் காற்றோட்டமும் இருக்கும். உலர்ந்த இலைகள், காய்கறி கழிவுகள் மற்றும் மீன், இறால் தோல் நண்டு ஓடுகள் போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்தி விரைவான வளர்ச்சிக்கு உதவும் வகையில் உரத்தையும் தயார் செய்து கொள்கிறார்.

தனது உரத்தின் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ளும் அவர், "1 கிலோ மீன், இறால், நண்டு ஓடுகள் மற்றும் அதே அளவு கருப்பட்டி எடுத்து, அவற்றை மெல்லிய பப்பாளி தோலுடன் கலக்கவும். நிழலில் வைத்திருந்தால், உரம் சுமார் மூன்று மாதங்களில் பயன்படுத்தத் தயாராக இருக்கும். இது கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவற்றின் மிகச் சிறந்த மூலமாகும். இந்த தாதுக்கள் ட்ராகன் பழ செடி வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" என்று கூறுகிறார்.
டிராகன் பழங்கள் போன்ற அரியவகை பழங்களை நம் நாட்டில் விளைவிப்பதே சற்று கடினமாக இருக்கும் சூழலில் மண்ணற்ற முறையைப் பயன்படுத்தி அதில் லாபம் பார்த்து வரும் இந்தப் பெண் முயற்சித்தால் முடியாததே இல்லை என்பதை நிரூபித்துள்ளார். ஓய்வுக்குப் பிறகு அவருடைய முயற்சியின் மூலம் தற்போது மாத மாதம் கணிசமான வருமானத்தை பார்த்து வரும் இவர் பலருக்கும் ஒரு சிறந்த உதாரணம்.


Click it and Unblock the Notifications