நாளுக்கு நாள் சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், தினமும் ஒரு நபராவது மோசடிக்காரர்களின் வலையில் விழுந்து தங்களுடைய வாழ்நாள் சேமிப்பை இழக்கின்றனர். அதற்கு சான்றாக ஹைதராபாத்தைச் சேர்ந்த 73 வயதான நபர் "டிஜிட்டல் அரெஸ்ட்" மோசடியில் சிக்கி ரூ.45.5 லட்சத்தை இழந்துள்ளார். இந்தச் சம்பவம் எப்படி நடந்தது? மோசடி செய்ய பயன்படுத்தப்பட்ட யுக்தி என்ன? என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.
சர்மா என்ற 73 வயதான ஓய்வு பெற்ற பேராசிரியருக்கு நவம்பர் 12-ஆம் தேதி அன்று ஒரு அழைப்பு வந்துள்ளது. வழக்கம் போல போதைப் பொருள் சர்மாவின் பெயரில் வந்துள்ளதாக மோசடிக்காரர்கள் கூறியுள்ளனர். மேலும் அவர் பண மோசடியில் வழக்கில் சிக்கி இருப்பதாகவும் அழைப்பாளர் குற்றம் சாட்டியுள்ளார். கைது செய்வதை தவிர்க்க மோசடிக்காரர்கள் தாங்கள் சொல்வதற்கு ஒத்துழைக்கும் படி கூறியுள்ளனர்.

வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் சிபிஐ அதிகாரி போல காட்சி அளிக்கும் ஒருவர் போலீஸ் சீருடையில் தோன்றி ஷர்மாவிடம் பேசியுள்ளார். அதோடு வீட்டில் ஒரு தனி அறையில் இருக்கச் சொல்லி டிஜிட்டல் அரெஸ்ட் எனக்கூறி ஷர்மாவை மிரட்டியுள்ளனர். தாங்கள் சொல்வதற்கு இணங்க தவறினால் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஷர்மாவிடம் கூறியுள்ளனர்.
டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி என்றால் என்ன? தற்போது மோசடிக்காரர்கள் பயன்படுத்தும் யுக்திகளில் இதுவும் ஒன்று. போதை பொருள் அடங்கிய பார்சல் பாதிக்கப்படும் நபரின் பெயரில் வந்துள்ளதாக கூறி, அவர்களுடைய வீட்டின் அறையிலேயே தனிமையில் இருக்கச் சொல்லி, கைது செய்யப்படாமல் இருக்க வேண்டுமானால் தங்களுடைய வங்கி கணக்குக்கு பணத்தை அனுப்புமாறு மிரட்டி பணம் பறிப்பது தான் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி.
இந்த சம்பவத்திலும் அப்படித்தான் நிகழ்ந்துள்ளது. சர்மாவிடம் தங்கள் வங்கி கணக்குக்கு பணத்தை அனுப்பும் படி கூறியுள்ளனர். அதற்கினங்க சர்மா கூகுள் பே, பேடிஎம், நெட் பேங்கிங் மற்றும் ஆர்டிஜிஎஸ் போன்ற பேமெண்ட் தளங்களின் வழியாக மோசடி செய்பவர்களின் கணக்குகளுக்கு பணத்தை அனுப்பியுள்ளார். அனைத்து செயல்முறையும் முறையானதாகத் தோன்றுவதற்காக மோசடி செய்பவர்கள் உச்ச நீதிமன்றத்தில் இருந்து வழங்கப்படும் போலி ரசீதுகளை போலவே ரசிதுகளையும் வழங்கியுள்ளனர். எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க என்று சொல்லும் அளவுக்கு பக்கா பிளானோடு இந்த மோசடியை அரங்கேற்றியுள்ளனர்.
இதன் காரணமாக சர்மா மொத்தம் ரூ.45.5 லட்ச ரூபாயை அனுப்பியுள்ளார். பிறகு சந்தேகம் அடைந்த சர்மா தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அருகில் உள்ள சைபர் கிரைம் போலீசாரை தொடர்பு கொண்டார். அவரது புகாரின் அடிப்படையில், IT சட்டத்தின் பிரிவுகள் 66(C) மற்றும் 66(D) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆள் பேர் தெரியாத நபர்களிடம் பேச வேண்டாம் என்றும், பணப்பரிவர்த்தனை செய்ய வேண்டாம் என்றும் காவல்துறையினர் தொடர்ந்து எச்சரித்தாலும் ஏமாறும் மக்களின் எண்ணிக்கை குறையவே இல்லை. இதுபோன்ற மோசடி அழைப்புகள் உங்களுக்கு வந்தால் உடனடியாக அழைப்பாளரின் விவரங்களை வைத்து அருகில் உள்ள காவல்துறையில் புகார் அளியுங்கள். அதோடு குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். ஒரு வேலை உங்களுக்கு தெரியாத விஷயங்கள் பிறருக்கு தெரியலாம். இது மோசடி என்று ஒருவருக்கு தெரிந்தாலும் பண இழப்புகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.


Click it and Unblock the Notifications