ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) அடுத்த 5 ஆண்டுகளில் ஆந்திரப் பிரதேசத்தில் 500 கம்ப்ரெஸ்ட் பயோகேஸ் (CBG) தொழிற்சாலைகளை அமைக்க ரூ.65,000 கோடி முதலீடு செய்ய உள்ளது. இது குஜராத் மாநிலத்திற்கு வெளியே செய்யப்படும் மிகப்பெரிய முதலீடாகும். இந்த ஆலைகள் ஒவ்வொன்றும் ரூ.130 கோடி முதலீட்டில் அமைக்கப்பட உள்ளது.குஜராத் மாநில அரசின் மதிப்பீட்டின்படி 2,50,000-த்திற்கும் அதிகமான நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்பை வரவிருக்கும் புதிய பயோ கேஸ் ஆலைகள் உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டம் அமைக்கப்படுவது குறித்த செய்தியை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரான ஆனந்த் அம்பானி மற்றும் ஆந்திர பிரதேச தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரான நாரா லோகேஷ் ஆகியோர் மும்பையில் உறுதி செய்துள்ளனர்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஆந்திரப் பிரதேச தொழில் துறை இடையே புதன்கிழமை அன்று விஜயவாடாவில் முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர அரசு சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சுத்தமான எரிசக்தி கொள்கையின் கீழ் பயோ எரிபொருள் திட்டங்களை செயல்படுத்துவதற்கு ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. இதில் 5 ஆண்டுகளுக்கு தொழிற்சாலைகளில் செய்யப்படும் மூலதன முதலீட்டில் 20 சதவீத மூலதன மானியம், ஐந்து ஆண்டுகளுக்கு மாநில சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் மின்சார கட்டணம் ஆகியவற்றிலும் முழுமையான விலக்குகளை வழங்குகிறது.
முதலீட்டாளர்களை ஈர்ப்பதும், வேலை வாய்ப்பை உருவாக்குவதும் எங்களின் எரிசக்தி கொள்கையின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாக உள்ளது. அதற்காக பல்வேறு சலுகைகளையும் நாங்கள் வழங்கி வருகிறோம். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் ஆந்திர பிரதேசத்தில் முதலீடுகளைக் கொண்டுள்ளது. அவர்களை முதலீடு செய்ய வைப்பதற்கு நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம் என்று அமைச்சர் நாரா லோகேஷ் கூறியுள்ளார்.
2,50,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவது குறித்தும் அமைச்சர் தனது பாராட்டை தெரிவித்தார். இது மாநில இளைஞர்களுக்கு ஒரு "கேம் சேஞ்சர்" என்றும் கூறியுள்ளார். ஆதாரங்களின்படி வரவிருக்கும் புதிய ஆலை அரசாங்கத்தின் தரிசு நிலங்களுக்கு புத்துயிர் அளிப்பது மட்டுமல்லாமல் விவசாயிகளுடன் இணைந்து பணியாற்றும் என்றும் கூறப்படுகிறது.
பயோகேஸ் உற்பத்தி செய்யப்படும் காரணத்தினால் அதற்கு தேவையான மூலப்பொருட்கள் விவசாயிகளிடமிருந்து பெறப்படும். இதனால் விவசாயிகளுக்கு லாபம் அதிகரிப்பதோடு அம்மாநிலத்தில் வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும்.
இந்த ஆலையின் மூலம் விவசாயிகள் ஆண்டுதோறும் ஏக்கருக்கு 30,000 ரூபாய் வருமானத்தை அதிகரிக்க முடியும் என்று கணிப்புகள் தெரிவிப்பதாக ஒரு அரசாங்க அதிகாரி கூறினார். இந்த ஆலைகள் மாநிலத்திற்கு ஏராளமான நிதி மற்றும் நிதி அல்லாத நன்மைகளை வழங்கும் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications