பிரிட்டன் நாட்டின் பிரமதராகப் பதவியேற்றிய லிஸ் ட்ரஸ் வெறும் 45 நாளில் ராஜினாமா செய்தது உலக நாடுகளை அதிர்ச்சி அடையச் செய்தது, இந்நிலையில் அடுத்த ஒரு வாரத்தில் புதிய பிரதமருக்கான தேர்தல் நடக்க உள்ளது.
பிரிட்டன் பிரதமரான லிஸ் ட்ரஸ் மற்றும் முன்னாள் நிதியமைச்சராக இருந்த குவாசி குவார்டெங்க் இணைந்து அறிவித்த மினி பட்ஜெட் அந்நாட்டின் பொருளாதாரத்திலும், ஆட்சியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதால் லிஸ் ட்ரஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் புதிய பிரதமர் போட்டியில் முன்னாள் அதிபரான போரிஸ் ஜான்சன் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் நிதியமைச்சருமான ரிஷி சுனக் போட்டிப்போட்டு வந்த நிலையில் போரிஸ் ஜான்சன் திடீரென விலகுவதாக அறிவித்தார்.
இதன் மூலம் பிரிட்டன் பிரதமராகும் வாய்ப்பு ரிஷி சுனக் கிடைத்துள்ளது.
பிரிட்டன் பிரதமர்
பிரிட்டன் பிரதமருக்கான போட்டியில் இருந்து முன்னாள் பிரதமரான போரிஸ் ஜான்சன் விலகுவதாக ஞாயிற்றுக்கிழமை தகவல் வெளியாகியுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெற தனக்குப் போதுமான ஆதரவு இருக்கும் போதிலும் போரிஸ் போட்டியில் இருந்து விலகுவதாகவும், நாட்டிலும், கன்சர்வேட்டிவ் கட்சியிலும் ஒற்றுமை கட்டாயம் தேவை எனவும் போரிஸ் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
லிஸ் ட்ரஸ்
லிஸ் ட்ரஸ் தனது பதவியை விலகியிருக்கும் நிலையில் புதிய பிரதமருக்கான தேர்தல் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் நடக்க உள்ளது, இதே முறையில் தான் போரிஸ் ஜான்சன் பதவியை ராஜினாமா செய்த போது லிஸ் ட்ரஸ் தேர்வு செய்யப்பட்டார். இந்தத் தேர்தலில் போரிஸ் ஜான்சன்-க்கு சுமார் 102 பேர் ஆதரவு தெரிவித்து உள்ளதாகவும் இதன் மூலம் மீண்டும் பிரதமராகும் வாய்ப்பு உள்ளது என்றும் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
போரிஸ் ஜான்சன்
ஆயினும் நாட்டின் விருப்பம், கட்சியின் ஒற்றுமை ஆகியவற்றின் காரணமாக இப்போட்டியில் இருந்து தான் விலகுவதாக அறிவித்துள்ளார் போரிஸ் ஜான்சன். இந்நிலையில் தற்போது பிரதமர் போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் மற்றும் பென்னி மோர்டான்ட் ஆகியோர் உள்ளனர்.
ரிஷி சுனக்
இந்த நிலையில் ரிஷி சுனக்கிற்கு ஏற்கனவே 142 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் பென்னி மோர்டான்ட்-க்குத் தற்போது வெறும் 29 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்து உள்ளது. திங்கட்கிழமை மதியம் 2 மணிக்குள் 100 பேரின் ஆதரவு பெற்றால் மட்டுமே தேர்தல் நடக்கும்..
முடிவு இன்று
இல்லையெனில் போட்டியின்றி ரிஷி சுனக் பிரிட்டன் நாட்டின் பிரதமராக அறிவிக்கப்படுவார். பென்னி மோர்டான்ட் பிரதமருக்கான போட்டியில் வெள்ளிக்கிழமை நுழைந்தார், ஆனால் போரிஸ் ஜான்சன் கடைசி நேரத்தில் விலகிய காரணத்தால் ரிஷி சுனக்கிற்கு வாய்ப்புகள் அதிகமாகியுள்ளது.


Click it and Unblock the Notifications