பிரயாக்ராஜ்: இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி அவ்வப்போது ஆற்றும் உரைகள் செய்தியில் இடம்பிடித்து விடும். அந்த வகையில் அண்மையில் ஒரு கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட நாராயண மூர்த்தி முக்கியமான பிரச்சினை குறித்து பேசி இருக்கிறார்.
பிரயாக்ராஜில் உள்ள மோதிலால் நேரு தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், நாராயணமூர்த்தி தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவின் மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வரும் நிலையில் அது நாட்டின் நிலைத்தன்மைக்கு மிகப்பெரிய அபாயமாக உருவாகும் வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.

இந்தியாவில் அவசர காலத்திலிருந்து மக்கள் தொகை கட்டுப்பாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், இது இப்போது நாட்டின் எதிர்காலத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் காரணியாக இருக்கிறது என்றும் கூறினார்.
மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ற வகையில் தனிநபருக்கான நிலம், சுகாதார வசதி போன்றவற்றில் பற்றாக்குறை ஏற்பட்டு இந்தியாவில் வருங்காலத்தில் பெரிய சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என நாராயணமூர்த்தி தெரிவித்தார்.
அமெரிக்கா, பிரேசில், சீனா ஆகிய நாடுகளுடன் ஒப்பிடும் போது மக்கள் தொகை பிரச்சினை இந்தியாவுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்றார். ஏனெனில் அங்கே தனிநபருக்கான நிலம் கிடைப்பது அதிகமாக இருக்கிறது இந்தியாவில் நிலைமை வேறு என தெரிவித்தார்.
அவசர காலத்திலிருந்து, இந்தியர்களாகிய நாம் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டில் போதுமான கவனம் செலுத்தவில்லை என சுட்டிக்காட்டிய நாராயணமூர்த்தி, இது நம் நாட்டை நிலைக்க முடியாததாக மாற்றும் அபாயத்தை ஏற்படுத்துகிறது என கூறினார். சுமார் 145 மக்கள் தொகையுடன் இந்தியா தற்போது உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருக்கிறது.
முன்னதாக தன்னுடைய சொந்த வாழ்க்கை பயணத்தை குறித்து மாணவர்களிடைய பேசிய நாராயணமூர்த்தி தனக்கு முந்தைய சந்ததியினர் செய்த தியாகங்கள் தான் தன்னை இந்த நிலையில் கொண்டு வந்து நிறுத்தி இருப்பதாக கூறினார். நாட்டில் ஒரு குறிப்பிட்ட தலைமுறையினர் செய்யும் தியாகங்கள் தான் அடுத்த தலைமுறையினரின் வாழ்க்கை நிலையை உயர்த்துகிறது என கூறினார்.
தன்னுடைய பெற்றோர், உடன் பிறந்தவர்கள் , ஆசிரியர்கள் உள்ளிட்டோர் செய்த தியாகங்கள் தான் தன்னுடைய வளர்ச்சிக்கு உதவியது என்றும் அவர்களுடைய தியாகங்கள் வீண் போகவில்லை என்பதற்கு நானே சான்று என்றும் மாணவர்கள் மத்தியில் நாராயணமூர்த்தி தெரிவித்தார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications