சிறு விஷயத்தில் தொடங்கி கடின உழைப்பை கைவிடாமல் இருந்தால் ஒருவர் எதை வேண்டுமானாலும் அடைந்து விடலாம் என்பதற்கு உதாரணமாய் குடிசைப் பகுதிகளில் வாழ்ந்து தெருவோர வியாபாரியாக பிழைப்பு நடத்தி வந்த ஒருவர் தற்போது துபாயில் மிகப்பெரிய கோடீஸ்வரராக இருக்கிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? யார் இவர்?, இவர் அப்படி என்ன செய்தார்?, இவ்வளவு பெரிய மாற்றத்திற்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யக் கதை என்ன? என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
ரிஸ்வான் சஜன் மும்பையில் பிறந்தவர், இவரது குடும்பம் நிதி நெருக்கடியில் மிகவும் சிரமப்பட்டு வந்தது. குறிப்பாக சஜன் தான் 16 வயதில் இருக்கும்போது தனது தந்தையை இழந்தார். தனது குடும்பத்திற்காக பால் விநியோகம், பட்டாசு மற்றும் புத்தகங்கள் விற்பனை என பல்வேறு வேலைகளைச் செய்து வந்தார்.

ஆனால் தன்னுடைய குடும்பத்தின் வறுமை காரணமாக 1981-ஆம் ஆண்டில் ரிஸ்வான் சஜன் சிறந்த வாய்ப்புகளைத் தேடி குவைத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் தனது மாமாவின் கட்டிட பொருட்கள் விற்பனை கடையில் விற்பனையாளராக தனது வாழ்க்கையை தொடங்கியுள்ளார். இங்கு அவருக்கு விலை மதிப்பற்ற தொழில் அனுபவம் கிடைத்துள்ளது. அவருடைய அர்ப்பணிப்பு மற்றும் பணி நெறிமுறை காரணமாக விரைவாக உயர்ந்துள்ளார்.
இப்படியே சென்று கொண்டிருந்த சஜனின் வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்புமுனையாக 1991-ஆம் ஆண்டில் நடந்த வளைகுடா போர் அவரை மீண்டும் மும்பைக்கு திருப்பி அனுப்பியது. இதனால் இவர் தன்னுடைய இலக்குகளை அடைவதில் தாமதத்தை சந்தித்தார்.
டான்யூப் குழுமத்தின் தோற்றம்: இருப்பினும் சஜன் வந்த தடைகளால் துவண்டு விடாமல் தனது சொந்த இலக்குகளை அடைவதில் வைராக்கியத்துடன் இருந்துள்ளார். 1993-ஆம் ஆண்டில் டான்யூப் குழுமத்தை ஒரு சிறிய வணிகமாக தொடங்கியுள்ளார். அவரது தொலைநோக்கு பார்வையும், அசைக்க முடியாத உறுதியும் இந்த சிறிய நிறுவனத்தை ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக மாற்றியது, 2019-ஆம் ஆண்டு டான்யூப் குழுமம் சந்தையில் தனக்கென ஒரு இடத்தை உறுதிப்படுத்தியது. அப்பொழுது 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் வருடாந்திர வருவாயைப் பதிவு செய்தது.
வணிகத்தை விரிவுபடுத்துதல்: சஜனின் வழிகாட்டுதலின் கீழ் டான்யூப் குழுமம் கட்டிட பொருட்கள் மட்டும் இன்றி, ரியல் எஸ்டேட், வீட்டு அலங்கார பொருட்கள் மற்றும் பிறத் துறைகளிலும் ஈடுபட்டது. ஓமன், பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபியா போன்ற மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் உள்ள சந்தைகளில் நன்கு அறியப்பட்டது. மாறிவரும் சந்தைக்கு ஏற்ப சஜன் தனது திறமை மற்றும் நுண்ணறிவை பல்வகைப்படுத்த தொடங்கியுள்ளார்.இதனால் சஜனின் தொழில் நன்கு விரிவடைந்து லாபத்தை பெற்று தந்தது.
பில்லியனரின் நிகர மதிப்பு: ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பொருளாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, ரிஸ்வான் சஜன் தற்போது துபாயில் உள்ள பணக்கார இந்தியர்களில் ஒருவராக உள்ளார், இவருடைய நிகர மதிப்பு 2.5 பில்லியன் டாலர்கள். இந்திய மதிப்புக்கு சுமார் ரூ. 20,830 கோடி. அவரது கதை தொழில் சாதனையை மட்டுமல்ல, விடாமுயற்சி, தைரியம் மற்றும் தொழில்முனைவோர் உணர்வையும் எடுத்துக்காட்டுகிறது.


Click it and Unblock the Notifications