பண நிர்வாகம் மற்றும் முதலீடு பற்றி பலருக்கு கற்றுக்கொடுத்த, புகழ்பெற்ற புத்தகமான Rich Dad Poor Dad நூலின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி, இப்போது உலக மக்களுக்கு ஒரு மிகப்பெரிய எச்சரிக்கையை விடுத்துள்ளார். அதாவது, வரலாற்றிலேயே மிக மோசமான பொருளாதார சரிவு தொடங்கிவிட்டதாக அவர் கூறியுள்ளார். இந்தப் பாதிப்பு அமெரிக்கா மட்டுமல்லாமல், ஐரோப்பா மற்றும் ஆசியாவிலும் பரவி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார சரிவுக்கு என்ன காரணம்..?:கியோசாகி, இந்த பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணம் செயற்கை நுண்ணறிவை (Artificial Intelligence) என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

வேலை இழப்பு : AI தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருவதால், அது பல லட்சக்கணக்கான மனிதர்களின் வேலைகளை மொத்தமாக நீக்கிவிடும்.
ரியல் எஸ்டேட் பாதிப்பு : மக்கள் வேலைகளை இழந்தால், வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கான தேவையும் குறையும். இதன் காரணமாக அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புக்கான ரியல் எஸ்டேட் சந்தைகள் பலத்த அடி வாங்கும். மேலும், அவை சரிந்து விழும் அபாயமும் உள்ளது.
பழைய கணிப்பு பலித்தது : கடந்த 2013ஆம் ஆண்டிலேயே, "வரலாற்றின் மிகப்பெரிய சரிவு வரப்போகிறது" என்று தான் ஒரு புத்தகத்தில் (RICH DADs PROPHECY) கணித்ததாகவும், துரதிர்ஷ்டவசமாக அது இப்போது உண்மையாகிவிட்டதாகவும் கியோசாகி தெரிவித்துள்ளார்.
வெள்ளியை வாங்குங்கள் : இந்த மாபெரும் பொருளாதார சரிவில் இருந்து தப்பித்து, மக்கள் தங்கள் செல்வத்தைப் பாதுகாக்க ஒரே வழி, சில குறிப்பிட்ட முதலீடுகளில் கவனம் செலுத்துவதுதான் என்று கியோசாகி ஆலோசனை வழங்கியுள்ளார். அதாவது, "அதிக அளவு தங்கம், வெள்ளி, பிட்காயின் மற்றும் எத்திரியம் ஆகியவற்றை வாங்குவதற்கு இதுதான் சரியான நேரம்" என்று அவர் கூறியுள்ளார்.
மேற்கண்ட நான்கிலும், வெள்ளி மட்டும் தான் மிக சிறந்த மற்றும் மிகவும் பாதுகாப்பான முதலீட்டு தேர்வு என்றும் அவர் அழுத்தமாக கூறியுள்ளார். இன்றைய சந்தை நிலவரத்தை பொறுத்தவரை வெள்ளியின் விலை 50 டாலராக உள்ளது. ஆனால், இது விரைவில் 70 டாலரை எட்டக் கூடும். மேலும், 2026ஆம் ஆண்டுக்குள் 200 டாலரை தொடவும் வாய்ப்புள்ளது என்று அவர் தனது கணிப்பில் தெரிவித்துள்ளார். புதிய வெள்ளி கிடைப்பது அரிதாகி வருவதால் இதன் தேவை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கியோசாகி கூறியுள்ளார்.
லட்சக்கணக்கான மக்கள் இந்த சரிவால் தங்கள் சேமிப்பு அனைத்தையும் இழக்க நேரிடும் என்றாலும், நீங்கள் இந்தப் பொருளாதாரச் சரிவுக்கு இப்போதே தயாராகிவிட்டால், இந்தச் சரிவு உங்களை மேலும் பெரிய பணக்காரராக மாற்றும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கியோசாகி தான் சொந்தமாக இரண்டு வெள்ளிச் சுரங்கங்களை வைத்திருப்பதாகவும், 1971ஆம் ஆண்டு முதல் தங்கத்தை வாங்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். வரவிருக்கும் நாட்களில், சந்தை சரியும்போதும் எப்படிப் பணம் சம்பாதிப்பது என்பது குறித்து மேலும் டிப்ஸ் தருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications