ஈரான் போர் உலக பொருளாதாரத்தில் மட்டுமல்ல உலக அரசியலிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. போர் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய், எல்பிஜி உள்ளிட்டவை கிட்டத்தட்ட மூன்று மாத காலமாக எந்த நாடுகளுக்கும் சப்ளை செய்யப்படவில்லை. ஒரு நாள் அமைதி பேச்சு வார்த்தைக்கு சாதகமான கருத்துக்களும் அடுத்த நாளே எதிரான கருத்துகளும் தெரிவிப்பது என அமெரிக்காவும் ஈரானும் மாறி மாறி விளையாடிக் கொண்டிருக்கின்றன. இந்த அரசியல் விளையாட்டுக்கு மத்தியில் சீனா மிக முக்கியமான ஒரு நடவடிக்கையை எடுத்து இருக்கிறது.
அமெரிக்க டாலர் உலகின் வலிமையான நாணயமாக கருதப்படுகிறது. இந்த அமெரிக்க டாலருக்கு இறுதிச்சடங்கு நடத்தும் வேலையை சீனா கையில் எடுத்திருக்கிறது. பிரபல அமெரிக்க பொருளாதார நிபுணரும் முதலீட்டு ஆலோசகரும் ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் எழுத்தாளருமான ராபர்ட் கியோசாகி இது தொடர்பாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் விரிவாக பதிவு செய்திருக்கிறார்.

அமெரிக்க டாலர் வலிமையான நாணயமாக இருப்பதற்கு முக்கியமான காரணம் பல்வேறு நாடுகளும் அமெரிக்க டாலரை கொடுத்து தான் வெளிநாட்டு வர்த்தகங்களை மேற்கொள்கின்றன. உதாரணமாக இந்தியாவை எடுத்துக் கொள்வோம் இந்தியா தனக்கு தேவையான கச்சா எண்ணெய் ,தங்கம் ,வெள்ளி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வெளிநாடுகளுக்கு அமெரிக்க டாலரை தான் பணமாக கொடுக்க வேண்டும். இதனால் இந்தியா ரூபாயை கொடுத்து அமெரிக்க டாலரை வாங்கி அதனை வெளிநாட்டு வர்த்தகங்களுக்கும் இறக்குமதிக்கும் பயன்படுத்த வேண்டி இருக்கிறது. இதனால் தான் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரியும் போதெல்லாம் நாம் கவலை கொள்ள வேண்டியிருக்கிறது.
உலகம் முழுவதும் வலிமையான நாணயமாக இருக்கக்கூடிய அமெரிக்க டாலரை வலுவிழக்கச் செய்ய வேண்டும் என சீனா நீண்ட காலமாகவே வியூகம் வகுத்து வருகிறது. அதற்கு ஈரான் போரை சாதகமாக பயன்படுத்த தொடங்கி இருக்கிறது. இது தொடர்பாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டு இருக்கும் ராபர்ட் கியோசாகி, ஈரான் போரை விட மோசமான ஒன்று நடக்க இருக்கிறது என கூறியிருக்கிறார்.
அமெரிக்க டாலருக்கு முடிவு கட்டுகிறார்களா என கேள்வியோடு தன்னுடைய பதிவை அவர் தொடங்கி இருக்கிறார். ஈரான் தங்களிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கக்கூடிய நாடுகளுக்கு அமெரிக்க டாலருக்கு மாற்றாக சீனாவின் நாணயமான யுவானை பயன்படுத்த தொடங்கி இருக்கிறது என கூறுகிறார். அப்படி என்றால் அமெரிக்க டாலரின் எதிர்காலம் என்ன ஆகும் என்ற கேள்வியை அவர் முன் வைத்திருக்கிறார்.
தயவு செய்து மக்கள் தங்கள் வேலைகளை ஒதுக்கி விட்டு டாலரின் நிலைமை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என கூறியிருக்கிறார். ஈரான் எப்படி டாலரை கொலை செய்தது என்ற தலைப்பில் ரே டாலியோ அண்மையில் வெளியிட்ட பாட்காஸ்டை அனைவரும் தயவு செய்து கேளுங்கள் எனக் கூறியிருக்கிறார். உலக நிதி வரலாற்றிலேயே மிக முக்கியமான ஒரு விஷயம் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் யாரும் அது குறித்து உங்களுக்கு விளக்கம் தர மாட்டார்கள் நீங்கள் தான் தெரிந்து கொண்டு உங்களை பாதுகாக்க வேண்டும் என கூறியுள்ளார்.
மிகப்பெரிய மாற்றம் உலக அளவில் உலக நிதி சந்தையில் நடந்து வருகிறது என சுட்டிக்காட்டி இருக்கிறார். உங்களுடைய பள்ளிகள் உங்களுக்கு நிதி சார்ந்த எந்த ஒரு அறிவையும் வழங்காது நீங்களாக தான் அவற்றை தேடி கற்றுக் கொள்ள வேண்டும் தயவு செய்து உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
ஈரான் அமெரிக்க டாலருக்கு பதிலாக சீனாவின் யுவானை வாங்கிக் கொண்டு கச்சா எண்ணெய் தருகிறது என்றால் உலக சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு குறையும். அதாவது மற்ற நாடுகளும் அமெரிக்க டாலருக்கு பதிலாக சீனாவின் யுவானை கொடுத்து ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்க தொடங்கும். இதனால் டாலரின் ஆதிக்கம் குறைந்து யுவானின் ஆதிக்கம் அதிகரிக்கும். இது அமெரிக்காவின் இமேஜையே பெரிய அளவில் டேமேஜ் செய்யும். எனவே டிரம்ப் அமெரிக்க டாலரை வலுப்படுத்த இன்னும் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க நேரிடும். இது உலகப் பொருளாதாரத்தையே புரட்டிப் போடக் கூடிய ஒரு விஷயமாக மாறும்.எனவே மக்கள் தங்கம் வெள்ளியில் முதலீடு செய்யுங்கள் டாலரில் உங்களுடைய பணத்தை சேமிப்பு கணக்கிலேயே வைத்திருக்காதீர்கள் என ராபர்ட் கியோசாகி அறிவுரை வழங்குகிறார்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

