ஏஐ மற்றும் ரோபோ தொழில்நுட்ப வளர்ச்சி ஒவ்வொரு நாளும் நம்மை பிரமிக்க வைக்கிறது. மனிதர்களுக்கு நிகராக ரோப்போக்களும் ஏஐ கருவிகளும் வேலை செய்ய தொடங்கிவிட்டன. இந்த சூழலில் ரோபோக்களும் மனிதர்களை போலவே தெருவில் இறங்கி போராட்டம் நடத்தி இருக்கின்றன.
போலந்து நாட்டின் தலைநகர் வார்சாவில் உள்ள டிஜிட்டல் விவகாரங்கள் அமைச்சகத்திற்கு வெளியே சுமார் 30 ரோபோக்கள் ஒன்றிணைந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உள்பட உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மனிதர்களின் வேலைவாய்ப்புகள் பெருமளவில் பறிபோகிறது. இதற்கு எதிராகவே இந்த போராட்டம் நடந்திருக்கிறது.

டெமாக்ரடிசம (Democratism) என்ற அமைப்பு இதற்கு ஏற்பாடு செய்திருந்தது. வேகமாக வளர்ந்து வரும் ஏஐ மற்றும் ரோபோமயமாக்கல் மனிதர்களின் வேலைவாய்ப்பு சந்தையை எத்தகைய தாக்கங்களுக்கு உள்ளாக்குகின்றன என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நூதன போராட்டம் நடத்தப்பட்டதாம்.
இரு கால்களுடன் நடமாடும் மனித வடிவ ரோபோக்கள் மற்றும் நாய் போன்ற நான்கு கால்களை கொண்ட Quadrupedal ரோபோக்கள் என சுமார் 30-க்கும் மேற்பட்ட ரோபோக்கள் கலந்துகொண்டன. இந்த ரோபோக்கள் வட்டமாக அணிவகுத்து நின்றும், கொடிகளை அசைத்தும் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தன.
ஸ்பீக்கர்கள் மூலம், எங்களுக்கு விதிகள் வேண்டும், ஒழுங்குமுறைகள் வேண்டும், சட்டம் வேண்டும், காத்திருக்காதீர்கள், விதிகளை உருவாக்குங்கள், வேலைவாய்ப்புகளைப் பாதுகாத்திடுங்கள் என முழக்கங்களை ஒலிபரப்பின.
JUST IN: AI-powered robots stage protest in Poland against AI replacing human workers 👀 pic.twitter.com/l9B9VINizH
— Daily Loud (@DailyLoud) September 10, 2026
இந்த போராட்டத்தை ஒருங்கிணைத்த கிரிகோர்ஸ் குலிஸ் ,மனிதர்கள் செய்யக்கூடிய அறிவுசார் பணிகளையும் எதிர்காலத்தில் மனித வடிவ ரோபோக்களும் ஏஐ தொழில்நுட்பமும் முற்றிலுமாக மாற்றிவிடும் அபாயம் உள்ளதை சுட்டிக்காட்டவே இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது என பேட்டி அளித்துள்ளார். நாம் இப்போது விழித்துக்கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மிக விரைவில் மனிதர்கள் பெரிய சிக்கலை எதிர்கொள்ள நேரிடும். தொழிலாளர்களை பாதுகாக்கும் கேடயமாக புதிய சட்டங்களும் விதிகளும் உடனடியாக கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு நேரில் வந்த போலந்து நாட்டின் டிஜிட்டல் விவகார அமைச்சர் கிரிஸ்ட்சோஃப் காவ்கோவ்ஸ்கி அரசாங்கம் இதுகுறித்து முறையான விதிமுறைகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக உறுதியளித்தார்.
ரோபோக்களே தங்களுக்கு எதிராக கட்டுப்பாடுகளைக் கோரி போராடுவது போல் காட்சிப்படுத்தப்பட்ட இந்த நிகழ்வு உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஏஐ வேகமாக வளர்ந்து வரும் சூழலில் அதன் ஆபத்துகள் குறித்து பரவலாக விவாதங்கள் எழ தொடங்கியுள்ளன.
அமெரிக்க, சீனா போன்ற நாடுகள் ஏஐ போட்டியில் யார் முந்துவது என்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல் மனித குலத்தின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications


